ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க
சென்னை: தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2026-2027 கல்வியாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.. இது குறித்து அகில இந்திய ஜனநாயக மக்கள் நல பேரவையின் நிறுவனரும் தேசிய தலைவருமான டாக்டர் ஆ.ஹென்றி ஒரு முக்கியமான விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.. அது என்ன தெரியுமா?
டாக்டர் ஹென்றி விடுத்துள்ள அறிக்கையில், "ஏழை எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கும் அனைத்து குழந்தைகளும் தரமான கல்வியை பெற வேண்டும் என்பதற்காகவே மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் இந்த கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 (RTE) செயல்படுத்தப்படுகிறது..

தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத இடங்கள் இவர்களுக்கு இலவசமாக ஒதுக்கப்படுவதால் பெற்றோர்கள் பெரும் பயன் அடையலாம்.. இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்வதால் இது சாதாரண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்..
ஏழை மாணவர்கள்
இந்த இலவச கல்வி திட்டத்தின் கீழ் உங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பினால் வரும் ஏப்ரல் 20 2026 முதல் மே 18 2026 மாலை 5 மணி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.. இதற்கு rte.tnschools.gov.in என்கிற இணையதளத்தை பயன்படுத்த வேண்டும்.
ஒருவேளை ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாத அல்லது வசதி இல்லாத பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை.. அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்கள் அல்லது வட்டார வள மையங்களை அணுகி விண்ணப்பிக்க தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.. இந்த திட்டத்தில் சேர விண்ணப்பிக்கும் குழந்தை வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட பள்ளி 1 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான விதிமுறை ஆகும்..
இலவச கல்வி
வயது வரம்பை பொறுத்தவரை எல்.கே.ஜி வகுப்பில் சேர விரும்பும் குழந்தைகள் ஆகஸ்ட் 1 2022 முதல் ஜூலை 31 2023 குள் பிறந்திருக்க வேண்டும்.. நேரடியாக முதல் வகுப்பில் சேர வேண்டும் என்றால் ஆகஸ்ட் 1 2019 முதல் ஜூலை 31 2020 குள் அந்த குழந்தை பிறந்திருக்க வேண்டும்.. பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனை பதிவேடுகளை கொண்டு குழந்தையின் வயதை உறுதி செய்து கொள்ளலாம்.
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் ஆதரவற்ற மற்றும் அனாதை குழந்தைகள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.. இவர்களுடன் துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் குலுக்கல் முறைக்கு முன்பே இடங்கள் ஒதுக்கப்படும் என்று டாக்டர் ஆ.ஹென்றி தனது அறிக்கையில் சொல்கிறார்..
தகுதியான ஆவணங்கள்
விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை போன்ற ஏதாவது ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணத்தை இணைக்க வேண்டும்.. நலிவடைந்த பிரிவினர் என்ற அடிப்படையில் விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் தங்கள் வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வட்டாட்சியரிடம் வாங்கிய வருமான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதேபோல் பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குழந்தைகள் தங்கள் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியaது அவசியம் ஆகும்.. விண்ணப்பங்கள் அனைத்தும் EMIS இணையதளம் வழியாக சரிபார்க்கப்பட்டு அதில் சரியாக இருக்கும் விண்ணப்பங்கள் மட்டும் தகுதியானது என்று வகைப்படுத்தப்படும்.. இது தொடர்பான தகவல்கள் பெற்றோர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் வழியாக உடனடியாக அனுப்பப்படும்..
விண்ணப்பங்கள் தேர்வு
தகுதியான மாணவர்களின் பட்டியல் மே 20 2026 அன்று மாலை 5 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.. ஒரு பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்திருந்தால் மே 22 2026 அன்று அந்த பள்ளி வளாகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தனியார் பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஏப்ரல் 7 2026 அன்றே தங்கள் பள்ளியின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.. மேலும் ஏப்ரல் 15 2026 அன்று பள்ளி வாரியாக இருக்கும் காலியிடங்கள் இணையதளத்திலும் வெளியிடப்படும்.. எனவே இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்று தர வேண்டும் என டாக்டர் ஆ.ஹென்றி கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications