அந்த 2 மேட்டர்.. சத்தமில்லாமல் சாதித்த திமுக கனிமொழி! ஆஹா, கருணாநிதியின் மகளால் பூரித்த தூத்துக்குடி
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, இந்த தேர்தலில் வெற்றி பெற்றது சாதனை இல்லை.. அதைவிட 2 விதமான சாதனையை கனிமொழி தூத்துக்குடியில் நிகழ்த்தியிருக்கிறார்.
ஸ்டெலைட் போராட்டம் முதலே, தூத்துக்குடியில் தன்னுடைய கவனத்தை அழுத்தமாக பதித்து வருபவர் கனிமொழி.. அந்த தொகுதியில் நிலவிய பல்வேறு போராட்டங்களில் தன்னை முதன்மைபடுத்தி ஈடுபடுத்தி கொண்டதாலேயே, கடந்த முறை தேர்தலில் எளிதாக தூத்துக்குடியில் வெற்றி பெற்றார்.

புது புது திட்டங்கள்: அதற்கு பிறகு தன்னுடைய தொகுதியின் வளர்ச்சியிலும், புதுப்புது திட்டங்களிலும் கவனம் செலுத்தி, தூத்துக்குடியை குறைவின்றி வைத்து கொண்டார்.. புயல் வந்தபோதும்சரி, பெருமழை வந்தபோதும் சரி, தொகுதியிலேயே தங்கியிருந்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து தந்ததை தமிழகம் அறியும்.
எனவே, எப்படியும் இந்த முறையும் தூத்துக்குடியையே திமுக மேலிடம் கனிமொழிக்கு ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதன்படியே, தொகுதியை பெற்ற கனிமொழி, ஓயாத பிரச்சாரங்களை தன்னுடைய பாணியிலேயே முன்னெடுத்தார்.
கருணாநிதி: கனிமொழி கருணாநிதி எம்பியை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, தமாக வேட்பாளர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜோன் உள்ளிட்ட 27 பேர் போட்டியிட்டார்கள். இதில் பாஜக நேரடியாகவே களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென வாசன் கட்சிக்கு தூத்துக்குடியை ஒதுக்கிவிட்டது. அதனாலோ என்னவோ, பாஜக மேலிட தலைவர்கள், தமாகா வேட்பாளருக்கான பிரச்சாரத்தை அவ்வளவாக மேற்கொள்ளவில்லை என்று சலசலக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் புயல் வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு ஓடோடி வந்து நிவாரண பணிகளை மேற்கொண்டது, சிவசாமி வேலுமணிக்கு சொந்த செல்வாக்கு போன்றவை சாதகமாக இருந்தாலும்கூட, கனிமொழியின் செல்வாக்கு முன்பு தகர்ந்துவிட்டது.
வாக்கு வித்தியாசம்: கனிமொழி 5,40,879 வாக்குகளையும், அதிமுக - 1,47,407 வாக்குகளையும், தமாக - 1,16,470 வாக்குகளையும், நாம் தமிழர் - 1,20,030 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்கள்.. அதோவது டெபாசிட் வாங்க வேண்டுமானால், 179293 ஓட்டுக்களை பெற வேண்டும். ஆனால், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட 27 பேருமே டெபாசிட் காலியாகியிருக்கிறார்கள்.
முதல் சுற்றில் இருந்தே முன்னிலை வகித்து வந்தார் கனிமொழி .. தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கனிமொழி.. இதன் மூலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் டெபாசிட்டை காலி செய்த வேட்பாளர் என்ற தனிச்சிறப்பை கனிமொழி பெற்றுள்ளார்.
தமிழிசை: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி தோற்கடித்திருந்தார் கனிமொழி.
அதுமட்டுமல்ல, நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது, முதல் ஆளாய் வெற்றி பெற்றவரும் கனிமொழிதான்.. இந்த முறை தமிழகத்தில் இருந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளரும் கனிமொழிதான். அந்தவகையில் இரட்டிப்பு சாதனையை சத்தமில்லாமல் படைத்திருக்கிறார் கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழி எம்பி அவர்கள்...!!!












Click it and Unblock the Notifications