செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்.. பட்டாசு வெடித்து, ஸ்வீட் வழங்கி திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்!
சென்னை: செந்தில் பாலாஜிக்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வர இருப்பதால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனை தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த அடுத்த நிமிடமே கரூரில் திமுகவினர் பட்டாசை வெடித்து கொண்டாட தொடங்கினர்.
முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி, 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பலாஜிக்கு இன்று ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. 25 லட்சம் ரூபாய்க்கு இரண்டு நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும்.
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாய்தா வாங்க கூடாது. வெளிநாடு செல்ல கூடாது. சாட்சிகளை கலைக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கிடைத்துள்ளதால் இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது.
15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பலாஜி சிறையில் இருந்து வெளியே வர உள்ளதால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செந்தில் பலாஜி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதையடுத்து திமுகவினர் மற்றும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மற்றும் பொறுப்பு அமைச்சராக இருந்த கோவையில் திமுக நிர்வாகிகள் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது என்று செய்திகள் வெளியான அடுத்த நிமிடங்களிலேயே பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைக்கு தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என்று திமுக தொண்டர்கள் கூறினர். கடந்த ஒரு வருஷமாக குடும்ப தலைவனை இழந்தது போல் இருந்தோம். எப்போது வெளியே வருவார் என்று எதிர்பார்த்து இருந்தோம். கரூரே இருளாகி இருந்தது. இன்றைக்கு சூழ்ச்சியை வென்றிருக்கிறார்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதன் மூலம் நீதி வென்று இருக்கிறது என்று கூறினர். தருமம் மீண்டும் வெற்றிபெற்று இருக்கிறது. இன்று தான் எங்களுக்கு தீபாவளி என தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். பட்டாசுகள் வெடித்தும், சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திமுக கொடிகளை ஏந்தியபடி பல்வேறு இடங்களிலும் அக்கட்சியினர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை கொண்டாடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications