பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்கால தடை! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: தமிழ்நாட்டில் பொது இடங்களில் உள்ள அரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்கால தடை விதித்துள்ளது சுப்ரீம் கோர்ட். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் 2 இடங்களில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

சாலைகளிலும், தெருக்களிலும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்படுகின்றன. கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளின்போது கொடிக் கம்பம் அமைந்துள்ள பகுதி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்படுகிறது என நீதிபதி தெரிவித்தார்.
யார் எவ்வளவு உயரத்தில் கொடிக் கம்பங்கள் அமைப்பது என்பதில் அரசியல் கட்சிகளிடம் போட்டிகள் ஏற்படுகின்றன. பொது இடங்கள், உள்ளாட்சி இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த சட்டத்திலும் அனுமதி, உரிமம் வழங்கவில்லை. நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்க போலீசாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் அதிகாரம் இல்லை.
எனவே தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அளித்து அடுத்த 2 வாரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்பிடம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கொடிக் கம்பங்கள் நடப்பட்ட இடம் சுத்தம் செய்யப்பட்டு, அதற்காக தோண்டிய குழிகள் மூடப்பட்டு பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டு இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். இதில் பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. உயர் நீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து இந்த உத்தரவுக்கு எதிராக சி.பி.ஐ.எம் கட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்றம் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications