மீண்டும் ஆரம்பிக்கும் கொரோனா அலை? தமிழகம் உட்பட இந்த 3 மாநிலங்களில் தான் முதலில் சிக்கல்
சென்னை: ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. இந்தியாவும் கூட அதில் தப்பவில்லை. இதற்கிடையே இந்தியாவில் எந்த மாநிலங்களில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாடு உட்பட 3 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ல் தொடங்கி நம்மை அலை அலையாகத் தாக்கிய கொரோனா நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போது சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டுக்குள் வந்திருந்தது. இருப்பினும், இப்போது வரையிலும் கூட கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகளில் இருந்து பல்வேறு நாடுகளும் இன்னும் முழுமையாக மீளவில்லை.

கொரோனா வைரஸ்
இதற்கிடையே இப்போது மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய நகரங்களான ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நகரம் முழுக்க கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளது. கடந்த மே 12க்கு பிறகு மட்டும் இந்த இரு நகரங்களிலும் 100+ கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாடு உட்பட மூன்று மாநிலங்கள்
இந்த இரு நகரங்கள் மட்டுமின்றி ஆசியா முழுக்கவே பரவலாக கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன. அப்படி தான் இந்தியாவிலும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இப்போது நாடு முழுக்க 257 ஆக்டிவ் கேஸ்கள் இருப்பதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையைத் தான் ஆக்டிவ் கேஸ்கள் எனக் குறிப்பிடுவார்கள். கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் தான் அதிகபட்ச ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.
சிக்கல்
கடந்த வாரம் மட்டும் கேரளாவில் 69 புதிய கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. தொடர்ந்து மகாராஷ்டிராவில் 44 பேருக்கும், தமிழகத்தில் 34 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பும், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்ற போதிலும் அதன் பாதிப்பு அதிகமாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். மும்பையின் கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது புற்றுநோய் நோயாளி, 14 வயது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்தனர். இறந்த பிறகு அவர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதேநேரம் அவர்கள் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்றே மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.
பொதுவாகக் குளிர் காலங்களில் தான் கொரோனா போன்ற சுவாச மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கும். ஆனால், இப்போது கோடைக் காலத்தில் கொரோனா அதிகரித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. முந்தைய காலங்களில் திடீரென பரவும் ஒரு வேரியண்ட் கொரோனா அலையை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால், இப்போது அதுபோல குறிப்பிட்ட வேரியண்ட்டால் கொரோனா அதிகரிக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
என்ன செய்ய வேண்டும்
மேலும், தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதும் கூட கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வயதானோர், இணை நோய் உள்ளவர்கள் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பூஸ்டர் வேக்சினை எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவதே சிறந்தது.












Click it and Unblock the Notifications