அமைச்சர் கீர்த்தனாவிற்கு பள்ளிக்கரணை மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை.. கனிமொழி எம்எல்ஏ விளக்கம்
சென்னை: சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவனையில், அமைச்சர் கீர்த்தனாவிற்கு கழுத்தின் கீழ், தோள்பட்டையை மார்பு எலும்புடன் இணைக்கும் நீளமான எலும்பான காரை எழும்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக 20 நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், வெறும் நான்கு நாளில் அவர் மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளார். இந்த தகவலை கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் அமைச்சர் கீர்த்தனாவின் உடல் நலம் குறித்து வெளியிட்ட பதிவில் கூறுகையில், "ஒரு பெண்ணாக, நான் நேரில் பார்த்த ஒன்று என்பதால் இதைச் சொல்ல விரும்புகிறேன். கால்போன் (கழுத்தின் கீழ் தோள்பட்டையை மார்பு எலும்புடன் இணைக்கும் காரை எலும்பில் அறுவை சிகிச்சை) அறுவை சிகிச்சைக்குப் பிறகு காமாட்சி மருத்துவமனையில் என் தங்கை அமைச்சர் கீர்த்தனாவைச் சந்தித்தேன். மருத்துவர்கள் சுமார் 20 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியிருந்தனர்.

ஆனால் மாநிலத்தின் மீதான அர்ப்பணிப்பு காரணமாக 4 நாட்களுக்குள்ளேயே அவர் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டார். மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோதும் கூட, முதலமைச்சரின் லண்டன் பயணத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை அவர் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவரது முதல் கேள்வி தனது வலி அல்லது மாத்திரைகளைப் பற்றியதாக இருக்கவில்லை; ஒவ்வொரு நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையும், அனைத்து ஏற்பாடுகளும் சரியான நேரத்தில் நடப்பதைப் பற்றி மட்டுமே இருந்தது. அவரை ஓய்வெடுக்குமாறு நான் கூறியபோதும் அவர் அதைக் கேட்கவில்லை.
என்னை மிகவும் பாதித்த விஷயம் என்னவென்றால்: அமைச்சர் ஆதவ் சார், கீர்த்தனா சில நாட்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறியபோது, எதிர்க்கட்சி சூழல் அதன் காரணம் என்ன, அவர் குணமடைந்துவிட்டாரா, அல்லது உண்மையில் அவர் என்ன மாதிரியான வேதனையைக் கடந்திருப்பார் என்று சிந்திக்கக்கூட இல்லை. அவர்களின் மனம் உடனடியாக ஒரே ஒரு காரணத்திற்குத்தான் சென்றது: மாதவிடாய். ஒரு பெண் வராவிட்டால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும் என்ற அந்த எண்ணம், அவரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை; மாறாக உங்கள் பிற்போக்குத்தனமான மனநிலையைத்தான் காட்டுகிறது.
பெண்கள் தங்கள் உடல் சுழற்சிகளால் மட்டுமே வரையறுக்கப்படுபவர்கள் அல்ல. நாங்கள் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், தாய்மார்கள், மகள்கள்-நோய், காயம் மற்றும் கடமை ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் சுமந்துகொண்டு, இன்னமும் களத்தில் நிற்பவர்கள். ஒரு பெண்ணின் உழைப்பில் தவறு கண்டுபிடிக்க முடியாதபோது, அவரது உடலைத் தாக்கும் பழைய பழக்கம்தான் ஒரு பெண்ணின் காரணமில்லாத இடைவெளியை அவரது உடலியல் சார்ந்ததாகக் சுருக்குவது.
4 நாட்களுக்குப் பிறகு, இன்னும் குணமடையாத நிலையிலும், வலி நிவாரணிகளை உட்கொண்டு, கட்டுப்போட்டுக் கொண்டே-எந்த இடைநிறுத்தமும் இன்றி அடுத்தடுத்து நிறுவனங்களைச் சந்திப்பதற்கும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திடுவதற்கும் அவர் நேரடியாகச் சென்றுவிட்டார்.
இந்தப் பிற்போக்குத்தனமான மனநிலை மாற வேண்டும். கடினமான சூழ்நிலையிலும் தொடர்ந்து வழிநடத்தும் பெண்களை நாம் கொண்டாட வேண்டுமே தவிர, அவர்களின் உடல் சுழற்சிகளைப் பற்றி விவாதிக்கக் கூடாது.
பெண்கள் இதைவிட மேலான மரியாதைக்குரியவர்கள். தமிழ்நாடு இதைவிட மேலான உயர்வுக்குரியது. மன்னித்துவிடு தங்கை கீர்த்தனா, இதை நீங்கள் ரகசியமாக வைக்க விரும்பினீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் இப்படி பதிவிட வேண்டியதாகிவிட்டது." இவ்வாறு அமைச்சர் கனிமொழி சந்தோஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
