மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே
சென்னை: தமிழக அரசியல் களம் 2026-ஐ நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக சார்பாக வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுவிட்டனர். இந்நிலையில், அக்னி நியூஸ் சர்வீஸ் வெளியிட்டுள்ள மண்டல வாரியான தேர்தல் கணிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
இந்தத் தரவுகளின்படி பார்த்தால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான தி.மு.க கூட்டணி ஒரு பிரம்மாண்ட வெற்றியை நோக்கி நகர்வது தெரிகிறது.

மண்டல வாரியான பலப்பரீட்சை: எங்கே யாருக்கு ஆதிக்கம்?
முதலில் தலைநகர் சென்னையை எடுத்துக்கொண்டால், சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 36 இடங்களை வாரிச் சுருட்டி ஒரு 'கிளீன் ஸ்வீப்' வெற்றியைப் பதிவு செய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிமுக கூட்டணிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் சூழல் நிலவுகிறது. அதேபோல், மத்திய மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் 35 இடங்களை தி.மு.க கைப்பற்ற, அதிமுக வெறும் 2 இடங்களோடு திருப்திப்பட வேண்டியுள்ளது.
தென் மண்டலத்தில் மொத்தம் உள்ள 58 தொகுதிகளில் 42 இடங்களை தி.மு.க கூட்டணி தட்டிச் செல்கிறது, அதிமுகவுக்கு இங்கு 16 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் அதிமுக ஓரளவுக்குப் போட்டி கொடுத்தாலும், அங்கேயும் தி.மு.க-வே முதலிடத்தில் இருக்கிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள 50 தொகுதிகளில் தி.மு.க 32 இடங்களையும், அதிமுக 18 இடங்களையும் பிடிக்கின்றன.
வடக்கு மண்டலத்தில் உள்ள 52 இடங்களில் தி.மு.க 35 இடங்களிலும், அதிமுக 17 இடங்களிலும் முன்னிலை பெறுகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 234 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 180 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்கிறது இந்தக் கணிப்பு. அதிமுக கூட்டணிக்கு 54 இடங்கள் வரை கிடைக்கலாம்.
வாக்கு சதவீதக் கணக்கு: தவெக மற்றும் நாதக-வின் தாக்கம்!
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, தமிழகம் முழுவதும் தி.மு.க கூட்டணி 44.9 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் கம்பீரமாக நிற்கிறது. அதிமுக கூட்டணி 38.5 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தனது பலத்தைத் தக்கவைக்கப் போராடுகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் மற்ற கட்சிகளின் பங்களிப்பு கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாநிலம் தழுவிய அளவில் 9.7 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 10.9 சதவீத வாக்குகளையும், மேற்கு மண்டலத்தில் 10.7 சதவீத வாக்குகளையும் தவெக அறுவடை செய்கிறது.
நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி (நாதக) ஒட்டுமொத்தமாக 4.8 சதவீத வாக்குகளைப் பெறுகிறது. சென்னை மற்றும் தென் மண்டலங்களில் நாதக முறையே 5.6 சதவீதம் மற்றும் 5.4 சதவீதம் வாக்குகளைப் பெற்றுத் தனது இருப்பைப் பதிவு செய்கிறது.
மண்டல வாரியான வாக்கு சதவீதத்தைப் பார்த்தால், மத்திய மண்டலத்தில் தி.மு.க கூட்டணி அதிகபட்சமாக 46.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக-வைப் பொறுத்தவரை மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் தலா 40 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தனது கோட்டையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மற்ற வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் மாநிலம் முழுவதும் சராசரியாக 2.1 சதவீத வாக்குகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்தக் கணிப்புகளின்படி பார்த்தால், தி.மு.க-வின் கோட்டை தகர்க்க முடியாததாக இருப்பதும், அதே நேரத்தில் புதிய வரவுகளான தவெக போன்ற கட்சிகள் கணிசமான வாக்குகளைப் பிரிப்பதும் தெளிவாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications