தருமபுரி மாவட்டத்தை மொத்தமா தட்டித் தூக்கும் அதிமுக! விழுப்புரம், திருச்சியிலும் திமுகவுக்கு சிக்கல்
சென்னை: சத்தியம் டிவி நடத்திய 2026 சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பில், அதிமுக பல தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த முறையை விட அதிக இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்றும், மத்திய மாவட்டமான திருச்சியிலும் அதிமுக கணக்கைத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டசபை தேர்தல் கணிப்பு
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணி vs தமிழக வெற்றிக் கழகம் vs நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டியை சந்திக்கப் போகிறது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் மக்களிடம் நேரடியாக சென்று பல்வேறு நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகின்றன. அந்தவகையில், சத்தியம் தொலைக்காட்சி, கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. மாவட்ட வாரியாக ஒவ்வொரு தொகுதிகளிலும் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை அலசி உள்ளது சத்தியம் டிவி.
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக 4 தொகுதிகளையும், அதிமுக 3 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் 4 தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்கிறது சத்தியம் டிவி கருத்துக்கணிப்பு. 3 தொகுதிகளில் இழுபறி நிலை ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக 5 தொகுதிகளையும், முழுமையாக கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலிலும் 5 தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றும் என்கிறது சத்தியம் டிவி கருத்துக்கணிப்பு.
திருச்சி மாவட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக மொத்தமுள்ள 9 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் 7 தொகுதிகளை திமுக கைப்பற்றக்கூடும், 2 தொகுதிகளில் இழுபறி நிலை ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications