சென்னை ஆகாய நடைபாதை..என்ன அழகு..எத்தனை அழகு..பாதுகாப்புக்கு சிசிடிவி..எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
சென்னை: தியாகராயநகரில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் நீளமான ஆகாய நடைபாதை மக்கள் பயன்படுத்த தயாராக உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த ஆகாய நடைபாதையானது, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில் 1,968 அடி நீளத்திற்கு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையின் மிகப் பெரிய வர்த்தகப் நகரமாக விளங்கும் தியாகராய நகர், நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்வதால் எப்போதும் நெரிசலுடனேயே காணப்படும். இந்த நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், ஆகாய நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, ரூ. 30 கோடி செலவில் தொடங்கிய ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. இடையே 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கொரோனா காரணமாக பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்த ஆகாய நடைபாதையானது, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை, 13 அடி அகலத்தில், 1,968 அடி நீளத்திற்கு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தற்போது முழுவதுமாக முடிவடைந்திருக்கும் நிலையில், வரும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது இந்தியாவின் மிக நீண்ட அகாய நடைபாதை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, "தி.நகர் நடைமேம்பாலம் பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க தயார் நிலையில் உள்ளது. மாம்பலம் ரயில் நிலையத்தை மேட்லி சந்திப்புக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தை இணைக்கும் அழகிய 570 மீட்டர் நீளம், 4.2 மீட்டர் அகலமுள்ள இந்த நடைபாதை மேம்பாலத்தின் இரு முனைகளிலும் லிஃப்ட், பேருந்து நிலைய முனையில் ஒரு எஸ்கலேட்டர், மாம்பலம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு,மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைபாதை எங்கும் பொதுமக்களை கவரும் வகையில், வண்ண ஓவியங்கள் வரைப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சக்கர நாற்காலி வசதி உள்ளிட்டவை உள்ளன. பாலம் திறக்கப்பட்டப்பின், சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்யாத அளவுக்கு தினசரி கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications