sub station முதல் மெகா உணவு பூங்கா வரை.. சீனியர் அமைச்சர்களிடம் பர்த்டே கிப்ட் கேட்ட டி.ஆர்.பி.ராஜா
சென்னை: யார் பிறந்தநாளுக்கு வாழ்த்தினாலும் சரி, யாரை வாழ்த்தினாலும் சரி மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா பர்த்டே கிப்ட் கேட்பதிலேயே குறியாக இருப்பார். அதுவும் புதிய துணை மின் நிலையம் உள்ளிட்ட கிப்ட்களைதான் கேட்பார்.
மன்னார்குடி எம்எல்ஏவாக இருப்பவர் டி.ஆர்.பி.ராஜா. இவர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் எழிலன் உள்ளிட்டோர் சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள். கிட்டதட்ட திமுக மூத்த நிர்வாகிகளை மாமா , அங்கிள், அண்ணன் என அழைத்தே பழக்கப்பட்டவர்கள்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றபோது டெல்டா மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் இல்லையே என அந்த தொகுதி மக்கள் ஏக்கப்பட்டனர். அப்போது கூட முதல்வர் ஸ்டாலின், "தமிழக முதல்வரே டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்" என அவரது தந்தையின் திருக்குவளை ஊரை சுட்டிக் காட்டி அப்பகுதி மக்களை சமாதானம் செய்தார்.

மன்னார்குடி எம்எல்ஏவாக உள்ள டி.ஆர்.பி.ராஜாவின் நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அமைச்சர் பதவி கிடைத்த போது கூட நெட்டிசன்கள் பலர் உங்களுக்கு அமைச்சர் பதவி இல்லையா என கேட்டிருந்தனர். சில நெட்டிசன்கள் மந்திரி ராஜாவாகலாம், ஆனால் ராஜா என்றுமே மந்திரியாக கூடாது என கிண்டலாக தெரிவித்தனர். இதில் உள்ள நகைச்சுவையை புரிந்து கொண்டு டி.ஆர்.பி.ராஜாவும் சிரித்து மகிழ்ந்தார்.
மின்னும் மன்னை உள்ளிட்ட திட்டங்களை ராஜா செயல்படுத்தி வருகிறார். அது போல் திமுக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் தனது சமூகவலைதள பக்கத்தில் உரிய பதிலடி கொடுப்பார். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு டிஆர்பி ராஜாவுக்கு இன்றைய தினம் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. அவருக்கு என்ன துறை ஒதுக்கீடு செய்யப்படும் என்பது இனிதான் தெரியவரும்.

இந்த நிலையில் எந்த அமைச்சராக இருந்தாலும் தனது தொகுதிக்கு வேண்டியதை கேட்டு பெறுவார். இவர் எந்த அமைச்சரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னாலும் சரி, இல்லை இவருடைய பிறந்தநாளுக்கு யார் வாழ்த்து சொன்னாலும் சரி உடனே பரிசு கேட்க தவறமாட்டார். அதுவும் உணவு பூங்கா, புதிய மின் துணை நிலையம் இப்படி மக்களுக்கு தேவைப்படுவதை மட்டுமே பரிசாக கேட்பார். ஜூலை 2 ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனின் பிறந்தநாள். அன்றைய தினம் அவருக்கு வாழ்த்து கூறிய டி.ஆர்.பி. ராஜா, அப்போது கொரோனா தடுப்பூசிகளுக்கு சற்று தட்டுப்பாடு இருந்த சமயம், இதை கருத்தில் கொண்டு மன்னார்குடி மக்களுக்கு தடுப்பூசி கொடுங்க அண்ணா என கேட்டிருந்தார்.

அது போல் டிஆர்பி ராஜாவுக்கு ஜூலை 12 ஆம் தேதி பிறந்தநாள். கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும் செந்தில் பாலாஜியும் வாழத்து கூறினர். அப்போது தங்கம் தென்னரசுவிடம் பர்த்டே கிப்டா டெல்டாவுக்கு ஒரு மெகா உணவு பூங்காவை பார்சல் பண்ணுங்கோ என கேட்டிருந்தார். அது போல் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அப்போது ராஜா ற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பிறந்தநாள் பரிசாக #மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட #நீடாமங்கலம் மூணாறு தலைப்பை #சுற்றுலா தலமாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறேன் என கேட்டிருந்தார்.
அது போல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிறந்த நாளின் போது மின்சாரத்துறையில் பல புதிய முன்னேற்றங்களை கொண்டு வரவிருக்கும் மாண்புமிகு #அமைச்சர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி #முதலமைச்சர் அவர்களிடம் #மன்னார்குடி க்கான பல கோரிக்கைகளை எடுத்து வைத்துள்ளேன். மன்னைக்கு தேவையான புதிய Sub Station களை தாங்கள் விரைவில் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் டிஆர்பி ராஜா.
இத்தனை ஏன் முதல்வரிடம் கூட தன் தொகுதிக்கு தேவையானதை கேட்டு பெற்றார். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு கோரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா பேசியிருந்தார். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ரூ 238 கேடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்றிருந்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியக் கூடியவர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என எம்எல்ஏ டி.ஆர்.பி ராஜா பேசினார், அமைச்சரிடம் போராடினார், ஏன் என்னிடமே வாதாடினார். எனவே நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதியம் உயர்த்தப்படும் என்றார். இப்படி முதல்வர், அமைச்சர்களை "நச்சரித்து" தனது தொகுதி மக்களுக்கு தேவையானதை கேட்டு பெறும் டிஆர்பி ராஜா தற்போது அமைச்சராகிவிட்டாரே இனி இவர் என்ன கிப்ட் கொடுப்பாரோ!












Click it and Unblock the Notifications