Exclusive: வருத்தமே இல்லைங்க.. 234 பேரும் அமைச்சராக முடியுமா?.. டிஆர்பி ராஜா கலகல பேட்டி
சென்னை: கருணாநிதியிடம் நான் பணியாற்றவில்லை. எனினும் அவர் இல்லாத குறையை ஸ்டாலின் போக்குகிறார் என மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டிஆர்பி ராஜா நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ் ஒன் இந்தியாவுக்கு எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:
ஸ்டாலின் தலைமையிலான முதல் பட்ஜெட் , வேளாண் துறைக்கான முதல் தனி பட்ஜெட், திமுக ஆட்சிக்கு வந்து 100 ஆவது நாள் ஆகிய 3 நிகழ்வுகளால் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார் டிஆர்பி ராஜா. மேலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கனவை ஸ்டாலின் நனவாக்கியதும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

கே: "செங்கமலம்" எப்படி இருக்காங்க
ப: நல்லாயிருக்காங்க, செங்கமலத்திற்காக புதிய நீச்சல் குளத்தை ரெடி செய்து கொடுத்துள்ளோம். இது அனைவருக்குமான ஆட்சி. உலகில் மனித குலம் மட்டுமல்ல விலங்குகளும் தாவரங்களும் நன்றாக இருக்க வேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கும் இந்த ஆட்சி நல்லது செய்து வருகிறது. அந்த வகையில் செங்கமலம் செல்லக்குட்டிக்கு நீச்சல் குளம் ரெடி செய்துள்ளோம். யானைகள் காடுகளில் இருப்பதுதான் எனக்கு பிடிக்கும். அதை கட்டி போட்டு வைக்கக் கூடாது. இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக இங்கு இருக்கிறது. அதை நன்றாக பார்த்து கொள்கிறோம்.
யானைகள் பராமரிக்க நிறைய விதிகள் இருக்கிறது. அதையெல்லாம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள செங்கமலத்திற்கு பின்பற்றி வருகிறோம்.
கே: செங்கமலத்தின் ஹேர் கட் ஐடியா யாருடையது
ப: அது பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து வந்தது. பாகன் அதை நன்றாக பார்த்து வருகிறார். அதனால் அதற்கு பாப் கட் செங்கமலம் என்றே பெயர் உண்டு.
கே: டிவிட்டரில் யார் எந்த கேள்வியை கேட்டாலும் சிரித்த முகத்துடன் பதில் அளிக்கிறீர்கள், என்ன காரணம்
ப: என்னை பற்றி நன்கு தெரிந்தவர் என்னை தவறாக புரிந்து கொண்டு கேள்வி கேட்டால் நான் கோபப்படலாம். என்னை பற்றி யாரென்றே தெரியாதவர்கள் ஏதேனும் பேசினால் எனக்கு எப்படி கோபம் வரும்? அறியாமையால் கேள்வி கேட்கிறார்கள். முடிந்தளவுக்கு விளக்குகிறோம், அதற்கும் மேல் புரியாவிட்டால் என்ன செய்வது? நிறைய பேருக்கு நம்மை கோபப்படுத்தி பார்ப்பதில் சந்தோஷம் இருக்கும்.

கே: 3ஆவது முறையாக மன்னார்குடி எம்எல்ஏவாக உள்ளீர்கள், மின்னும் மன்னை திட்டம் குறித்து சொல்லுங்கள்
ப: இரண்டு முறை எதிர்க்கட்சியில் இருந்த போதிலும் மன்னார்குடிக்கு என்னால் முடிந்த பல திட்டங்களை நான் செய்து வந்தேன். பட்ஜெட் தாக்கல் செய்து முடிந்துள்ளது. இனி துறை வாரியான மானியக் கோரிக்கைகள் வரும். அதில் மன்னார்குடிக்கு நிச்சயம் ஒரு மகத்தான இடம் கிடைக்கும். திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் நேரடி பார்வை எப்போதும் மன்னார்குடி மீது இருந்ததால்தான் அது திமுகவின் கோட்டையாக உள்ளது.
10 ஆண்டுகால காத்திருப்பிற்கு பிறகு கையில் ஆட்சி இருக்கிறது, இனி மன்னையை எப்படி மின்ன வைக்கிறேன் என்பதை மட்டும் பாருங்கள். என் மீது நம்பிக்கை வைத்து என் தொகுதி மக்கள் என்னை மூன்றாவது முறையாக தேர்வு செய்துள்ளார்கள். அவர்களுடைய நம்பிக்கை நிச்சயம் வீணாகாது. இதை சவாலாகவே சொல்கிறேன். இதுவரை மன்னார்குடியே பார்க்காத ஒரு வளர்ச்சியை நிச்சயம் பார்க்கும். கடந்த 35 நாட்களாக அமைச்சர்களை எல்லாம் டார்ச்சர் செய்துள்ளேன். இதனால் நிச்சயம் மன்னார்குடிக்கு நல்ல திட்டங்கள் வரும்.
கே: அமைச்சர் பதவி உங்களுக்கு கிடைக்காதது வருத்தம் இல்லையா
ப: எனது நண்பர்கள் அண்ணன்மார்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆகியுள்ளார்கள். இருக்கு்ம 234 பேரும் அமைச்சர்களாகிவிட முடியுமா, அப்பறம் ஆட்சியை எப்படி நடத்துவது? முதல்வரே டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்தானே. இதெல்லாம் முதல்வர் எடுத்த முடிவு.

கே: உங்களது அரசியல் பணிகளுக்கு உங்கள் தந்தை டிஆர் பாலு ஆலோசனைகளை வழங்குவாரா
ப: எந்த ஜென்மத்திலும் கிடையாது. அவருக்கு நான் அரசியலுக்கு வருவது ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. அரசியலில் இத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசுவர், அதனால் அரசியல் வேண்டாம் என்றார். எனது பணிகளை பார்த்துவிட்டு ஊருக்கு நல்லது செய்கிறேன் என்பதை அவர் நம்புவார் என நினைக்கிறேன்.
கே: மன்னார்குடிக்கு மூன்றாவது முறையாக எம்எல்ஏவாகியுள்ளீர்கள். இந்த நிலையிலும் எப்படி ட்விட்டரில் நேரம் ஒதுக்குகிறீர்கள்
ப: எனக்கு புதிய தகவல்களை, விஷயங்களை தெரிந்து கொள்ள ஆசை. கூகுளுக்கு அடுத்து டிவிட்டரில் நிறைய தரமான தகவல்கள் கிடைக்கிறது. எப்போதும் அப்டேட்டடாக இருக்க வேண்டும். அரசியல்வாதியாக மக்களுடன் இணைந்திருப்பதற்கு ட்விட்டர் அவசியமாகும். மக்கள் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே 2011 ஆம் ஆண்டு முதல் மன்னார்குடியில் மட்டும்தான் எம்எல்ஏ ஹெல்ப்லைன் இருக்கிறது.
கே: கலைஞர் கருணாநிதி இருக்கும் போது எம்எல்ஏவாக இருந்துள்ளீர்கள். இப்போது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தலைமையிலும் எம்எல்ஏவாக உள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்.
ப: கருணாநிதியை நாங்கள் ஒவ்வொரு நாளும் மிஸ் செய்கிறோம். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் மிகப் பெரிய கடல். ஸ்டாலினின் பெரும் வலிமையே உழைப்புதான். கடின உழைப்பாளி. கருணாநிதி பயணித்த அரசியல்வாதிகளும் அரசியல் நாகரீகமும் வேறு. கருணாநிதியின் ஸ்டைல் வேறு, ஸ்டாலினின் ஸ்டைல் வேறு. துரதிருஷ்டவசமாக கருணாநிதியின் ஆட்சியில் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
கே: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக இருக்குமா இல்லை அமல்படுத்தப்படுமா
ப: பட்ஜெட்டில் கூறியதை அமல்படுத்த முடியாத அளவுக்கு அதில் என்ன கஷ்டம் இருக்கிறது? அரசு கஜானா காலி, கொரோனா உள்ளிட்ட மிகப்பெரிய பேரிடருக்கு மத்தியில் ஸ்டாலின் ஆட்சி அமைந்துள்ளது. வரியில்லாத பட்ஜெட்டை யாரேனும் கொடுக்க முடியுமா, இவர் கொடுத்துள்ளார். எதை செய்ய முடியுமோ அதை மட்டுமே சொல்லியுள்ளார்கள். பெட்ரோலுக்கு 5 ரூபாய் சொன்னார்கள், ஆனால் 3 ரூபாய்தான் முடியும் என்பதால் அதை செய்துள்ளார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications