"தேவ தூதுவர்களா"?.. கள்ளக்குறிச்சியில் கைதான 128 பேரை ரிலீஸ் செய்யுங்க.. தடா ரஹீம் பரபரப்பு அறிக்கை
தடா ரஹீம், கள்ளக்குறிச்சியில் கைதானவர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: கள்ளக்குறிச்சியில் போராட்டம் செய்த, மொத்தம் 128 பேரை தமிழக போலீசா கைது செய்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
சின்னசேலம் மாணவி உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.. ஆயிரக்கணக்கானோர் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த வாகனங்களுக்கு தீவைத்ததுடன், போலீசாரின் வாகனங்களுக்கும் சேர்த்து தீ வைத்தனர்.. தாக்குதலையும் தொடர்ந்தனர்.

தடா ரஹீம்
இதையடுத்து, தனியார் பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்... இவர்களது கைது நடவடிக்கையும் அரசியலாக்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில்., இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தடா ரஹீம் கேட்டுக் கொண்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி நடந்த போராட்டத்தில் உணர்ச்சி மிகுதியால் சில வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கலாம் இந்த வன்முறை சம்பவங்களை யாரும் ஆதரிக்க முடியாது.

தேவ தூதர்கள்
ஆனால் தனியார் பள்ளி கல்லூரிகளில் தொடர்ந்து மாணவிகள் மரணம் அடைவதை பார்த்து யாரும் ஆனந்தம் அடைய முடியாது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி கல்லூரிகளின் முதலாளிகள் வானத்தில் இருந்து குதித்த தேவ தூதுவர்கள் இல்லை தங்கள் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் மரணம் அடைந்தால் அரசியல் வாதிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் துணை கொண்டு உண்மைகளை மூடி மறைப்பதே தொழிலாக கொண்டுள்ளனர்.

மாணவி மரணம்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு எதிராக நடந்த சம்பவங்களை வன்முறை கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. அதிகார திமிரில் மாணவர்களின் உயிருடன் விளையாடும் பண முதலைகளுக்கு எதிரான போராட்டமாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளனர். வீட்டு வாடகை ஒரு சில நாட்கள் தாமதமானாலும் வீட்டு உரிமையாளர்கள் பொறுத்து கொள்கின்றனர், ஆனால் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதா மாதம் கட்டணம் சரியாக கட்டிவிட வேண்டும்.

பீஸ் கெடுபிடி
இல்லை என்றால் பணம் கட்டாத மாணவர்களை எல்லா மாணவர்களுக்கு முன் நிற்க வைத்து அசிங்கப்படுத்துவது உட்பட கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட பள்ளி கட்டணம் கட்ட சொல்லி வற்புறுத்திய கொடுமை எல்லாம் நடந்து உள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்த மாணவி மரணம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 20 சிறார்கள் உட்பட 128 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகின்றோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
