மயிலாப்பூர் கோவிலுக்குள் அத்துமீறி போலீஸ் அதிகாரி அநாகரிகமா? இந்து முன்னணி கண்டனம்
சென்னை: சென்னை மயிலாப்பூர் கோவிலுக்குள் போலீஸ் அதிகாரி ஒருவர் அத்துமீறியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே, யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன், தனக்கு சொந்தமான கட்டடத்தில், 'கடவுள் இல்லை என்பவன் முட்டாள்,ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் போர்டு வைத்திருந்தார். அந்த போர்டு சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த தேவநாதன், கடவுள் இல்லை என்பவன் முட்டாள்,ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் இருந்த நமது யாதவ மகா சபையின் பெயர் பதாகையை இரவோடு இரவாக தலைமை அலுவலகத்திலிருந்து அகற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. அகற்றப்பட்ட பதாகையில் உள்ள அதே வாசகங்களுடன் தமிழகம் முழுவதும் பெயர் பதாகை வைக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
ஒவ்வொரு மாவட்ட யாதவ மகா சபை, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர,கிளை அலுவலகங்களிலும் கடவுள் இல்லை என்பவன் முட்டாள், ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற யாதவ மகா சபையின் வாசகம் கொண்ட பெயர் பதாகை வைக்கப்படும். அதிகார பலத்தை கொண்டு மாற்று சிந்தனை கொண்டவரை எல்லாம் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்ற அறிவாலயத்தின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் கடவுள் இல்லை என்பவன் முட்டாள்,ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் இருந்த பிளக்ஸ் பேனரை அகற்றியதை கண்டித்து யாதவா மகாசபை அமைப்பினரும் இந்து முன்னணியிரும் கடந்த இரண்டு நாட்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்தார். மேலும் சம்பவத்தன்று மயிலாப்பூர் கோவிலுக்குள் போலீஸ் அதிகாரி ஒருவர் அத்துமீறியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "இந்து முன்னணி மாநில செய்தித்தொடர்பாளர் இளங்கோவன் மற்றும் சென்னை பொறுப்பாளர்கள் செந்தில், முருகன் ஆகியோர் கபாலீஸ்வரர் கோவிலில் வழிபட்டு பிரகாரத்தை சுற்றி வரும்போது மயிலாப்பூர் சரக போலீஸ் அதிகாரி அத்துமீறி ஆலயத்திற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளை பேசி வலுக்கட்டாயமாக அவர்களை கைது செய்துள்ளார்.
ஆலயத்திற்குள் அத்துமீறி போலீஸ் நுழைந்து அநாகரிகமாக நடந்து கொண்டதை கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி அரசியல் சார்பு உடையவராகவே தொடர்ந்து செயல்படுவதாகவும் பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகிறது. இத்தகைய அதிகாரிகளால் காவல்துறை செயல்பாட்டிற்கு களங்கம் ஏற்படுகிறது. எனவே, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications