தமிழ்நாடு முதல்வர் தரப்பில் இருந்துதான் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை வந்தது.. டிகே சிவகுமார் தகவல்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தரப்பில் இருந்துதான் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்றும் கர்நாடகா முதலமைச்சர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 4 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா வந்தால் பெங்களூர் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் என கன்னடசாலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறப்பதைக் கண்டித்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடகாவில் மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்தார்.
தமிழக முதலமைச்சர் விஜய்யின் கர்நாடக விசிட் குறித்துப் பேசிய டி.கே.சிவகுமார், "பல்வேறு விவகாரங்கள் குறித்து எங்களை நேரில் சந்தித்து விவாதிக்க விரும்புவதாக தமிழக முதல்வரின் அலுவலகத்திலிருந்து எங்கள் தலைமைச் செயலருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி இருவரும் சந்திக்கலாம் எனத் திட்டமிட்டோம்.
தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா வருவது குறித்து தெரிவித்திருந்தாலும், அவரது பயணம் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. அவருடன் தொலைபேசியில் பேசியபோது இரு மாநில நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம்.
கர்நாடகாவில் தற்போது போராட்டங்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா வருகை தருவது சரியாக இருக்காது. எங்களின் விருந்தினராக அவர் வரும்போது அவருக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படக் கூடாது. எனவே, இரு மாநிலங்களுக்கும் சாதகமான சூழல் அமையும் போது இருவரும் சந்தித்துப் பேசுவோம்.
தண்ணீர் தொடர்பான விவகாரத்தில் இரு மாநிலங்களும் பயனடையும் வகையிலேயே தீர்வு அமைய வேண்டும். இவை அனைத்தும் மழைப் பொழிவைப் பொறுத்தே அமைகிறது. உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான வழிகாட்டுதலையும், தீர்ப்பையும் வழங்கியுள்ளது. மேகதாது அணைத் திட்டத்தைப் பொறுத்தவரை, அது எங்களை விடத் தமிழகத்திற்கே அதிகப் பலனளிக்கக்கூடியது. மின் உற்பத்தியைத் தவிர மற்ற அனைத்து வகையிலும் அது தமிழகத்திற்கு அதிக நன்மையை அளிப்பதாகவே உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
