குரோம்பேட்டையில் தேவாலயத்தை இடிக்க முடிவு.. பொக்லைனுடன் வந்த தாம்பரம் அதிகாரிகள்.. அதிர வைத்த மக்கள்
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் இந்திய சுவிசேஷ திருச்சபை அமைந்துள்ளது. 60 ஆண்டுகள் பழமையான இந்த திருச்சபையின் கட்டிடம் அனுமதி பெறாமல் சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த இடம் தன்னுடையது என்றும் கூறி, விஜயா என்பவர், வழக்கு தொடர்ந்தார். இதனால் திருச்சபையை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உடனே இடிக்கப்படவில்லை.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் இடிக்க வந்தனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலை, அண்ணா நகரில் இந்திய சுவிசேஷ திருச்சபை ஒன்று உள்ளது. இந்த திருச்சபை அனுமதி இன்றி கட்டப்பட்டு உள்ளதாகவும், அந்த நிலம் தன்னுடையது என்றும் கூறி விஜயா என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய சுவிசேஷ திருச்சபையை இடித்து அப்புறப்படுத்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.. இதையத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 5.12.2025 அன்று தேவாலய கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் 8.12.2025 அன்று சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தேவாலயத்தை இடித்து அகற்ற 6 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் பணியாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அஸ்தினாபுரம் சென்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தேவாலயம் உள்ளேயே ஏராளமானவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். அந்த பகுதி வியாபாரிகள் சங்கத்தினரும் கடையடைப்பு நடத்தி தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் . அனைத்து கட்சியினர், ஏராளமான பொதுமக்களும் தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டதால் பதற்றமான நிலை ஏற்பட்டது.
இதனால் மதியத்துக்கு மேல் தேவாலயத்தை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் பிற்பகலிலும் அசாதாரணமான சூழ்நிலை நிலவியதால் தேவாலயத்தை இடிக்கும் பணியை தள்ளிவைத்துவிட்டு, மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.
அந்த மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனிடையே இரு ஆண்டுகளாக இதேபோல் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications