தாம்பரம் டெண்டர் முறைகேடு.. ஐஏஎஸ் மீது மட்டும் நடவடிக்கையா? அமைச்சர் சரத் மீது ஏன் ஆக்சன் இல்லை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் நடந்த டெண்டர் முறைகேடு விவகாரத்தில், மாநகராட்சி ஆணையராக இருந்த பாலச்சந்தர் ஐஏஎஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அரசியல் புள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

tvk vijay ias

நடந்தது என்ன? அறப்போர் இயக்கம் கிளப்பிய புயல்

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் இரண்டு முக்கிய அழகுபடுத்தும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது:

1. பெருங்களத்தூர் மேம்பால ரவுண்டானாவில் அசோகா தூண் அமைத்து அழகுபடுத்தும் பணி (மதிப்பு ரூ. 27.3 லட்சம்).
2. சிட்லபாக்கம் பகுதியில் 'தண்ணீரை சேமிப்போம்' சிலை மற்றும் பூங்கா அமைக்கும் பணி (மதிப்பு ரூ. 18.6 லட்சம்).

இந்த இரண்டு பணிகளுக்கும் அரசு இணையதளத்தில் ஆகஸ்ட் 6 அன்றுதான் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒப்பந்தப்புள்ளிகள் ஆகஸ்ட் 24 அன்று திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளிலேயே அந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, அரசு அதிகாரிகளால் திறப்பு விழாவும் நடத்தப்பட்டுவிட்டது!

அதாவது, எந்த நிறுவனத்துக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து, பணிகளையும் முடித்துவிட்டு, கணக்கு காட்டுவதற்காகப் பெயரளவில் பின்னாளில் டெண்டர் விட்டிருக்கிறார்கள். இந்த அப்பட்டமான முறைகேட்டை ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையிடமும் அரசுத் துறையிடமும் கொண்டு சென்றது அறப்போர் இயக்கம்.

ஐஏஎஸ் அதிகாரி மட்டும் பலிகடாவா?

புகார் வெளியான சில மணி நேரங்களிலேயே தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஒரு உதவி செயற்பொறியாளரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அரசு உடனே நடவடிக்கை எடுத்துவிட்டதாகக் காட்டிக்கொண்டாலும், இங்கே எழும் முக்கியமான கேள்வி: ஒரு மாநகராட்சியில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணி டெண்டரே இல்லாமல் முன்கூட்டியே நடக்கிறது, அதுவும் அமைச்சர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்களின் கண்முன்னே நடக்கிறது என்றால், அது வெறும் அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவா?

அறப்போர் இயக்கம் புகார்

அறப்போர் இயக்கம் தனது புகாரில், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர். S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர்.

இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்., என்று கூறி உள்ளார்.

அமைச்சர் சரத் தப்பியது எப்படி?

இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் முக்கிய அமைச்சர் சரத்தின் தலையீடும், உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்களின் அழுத்தமும் இருந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. எந்தவொரு பெரிய அரசுப் பணியிலும், துறை அமைச்சரின் மறைமுக ஒப்புதல் அல்லது வாய்மொழி உத்தரவு இல்லாமல் ஒப்பந்ததாரர்கள் நேரடியாக களத்தில் இறங்கி பணிகளை முடிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.

ஆனால், வழக்கம்போல ஆளும் அரசு அரசியல் ரீதியான அழுத்தங்களை மூடிமறைத்து, ஐஏஎஸ் அதிகாரியையும் கீழ்மட்ட பொறியாளரையும் மட்டும் பொறுப்பாக்கி கைகழுவிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிகாரிகள் மீது எடுக்கும் வேகமான நடவடிக்கை, அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள் மீது ஏன் பாய்வதில்லை என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

முறைகேட்டின் பின்னணி

தாம்பரம் மாநகராட்சியில் கடந்த நான்கு மாதங்களில் விடப்பட்ட 565 டெண்டர்களில், ஒரே ஒரு பணிக்கு மட்டும்தான் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது; மீதமுள்ள நூற்றுக்கணக்கான டெண்டர்கள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன என்ற அதிர்ச்சித் தகவலையும் அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்துள்ளது. இதனால் விருப்பமானவர்களுக்கு வேலைகளை ஒதுக்கிவிட்டு, பிறகு டெண்டர் விட்டு கணக்கு முடிக்கும் மறைமுக நடைமுறை பரவலாக நடந்து வருகிறதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

முக்கிய அமைச்சரின் ஆதரவு இல்லாமல் இவ்வளவு பெரிய முறைகேடு துணிச்சலாக நடந்திருக்க முடியாது என்று எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. அரசு உண்மையிலேயே ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை நடத்த விரும்பினால், அதிகாரிகளை மாற்றுவதோடு நிறுத்தாமல், பின்னணியில் இருந்த அமைச்சர் சரத் உள்ளிட்ட அரசியல்வாதிகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+