அறப்போர் குற்றச்சாட்டு வைத்த சில மணி நேரங்களில்.. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மீது பாய்ந்தது ஆக்ஷன்
சென்னை: தாம்பரம் மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு புகாரை அடுத்து ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, இந்த பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு அமைச்சர் சரத்குமாரால் திறக்கப்பட்ட அசோக சின்ன சிலைக்கு ஒரு மாதம் கழித்து டெண்டர் விடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த டெண்டரிலும் மற்றொரு டெண்டரிலும் சேர்த்து 45 லட்சம் ரூபாய் வரை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரனும் அதிகாரிகளும் ஊழல் செய்ததாக இன்று அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தது.
தவெக ஆட்சியின் முதல் முறைகேடு என தலைப்பிட்டு அறப்போர் இயக்கம் வெளியிட்ட செய்தியும் அதற்கான ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையராக கூடுதலாக பொறுப்பை வகிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இன்று அறப்போர் இயக்கம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் அவர்கள் மீது கொடுத்த டெண்டர் முறைகேடு புகாரின் அடிப்படையில் அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த முதற்கட்ட நடவடிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது.
அரசு சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த முறைகேடு குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.
முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள்
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர்.
இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஒப்பந்தம் 1 - பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2)
இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன.
ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1):*
தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.
அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு
இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.
மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.
அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்
இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.
1.உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை
2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை
3.DVAC கிரிமினல் வழக்கு .
4.பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment):
5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting):
6.டெண்டரில் வெளிப்படைத்தன்மை
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
