இலையோடு வந்த உசேன்.. டெல்லி பயணம் “சக்சஸ்”! சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என தமிழ்மகன் பஞ்ச்
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படியே ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தேர்வில் செயல்பட்டதாக அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேனின் கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு வழங்கப்பட்டு உள்ள நிலையில், சென்னை திரும்பிய உசேன், தர்மம் மீண்டும் வென்றதாகவும், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படியே செயல்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தென்னரசுவை அதிமுக வேட்பாளராக ஏற்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கிய கடிதத்தை தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார்.
இதனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம், குறுகிய காலத்திற்கு தமிழ்மகன் உசேன் அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடவும் அனுமதித்தது. இதனால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு கிடைத்தது.

சென்னை திரும்பிய தமிழ் மகன்
இந்த நிலையில் டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சுற்றறிக்கையின் மூலம் வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டோம்.

தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெறப்பட்டு, பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினரின் பரிந்துரையின் பேரில் வேட்பாளரை தேர்வு செய்து, அதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நியதியை ஏற்று, பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்குச்சீட்டு படிவத்தின் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துவிட்டு வந்து உள்ளோம்.

தர்மம் வெல்லும்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மறுபடியும் தர்மம் வெல்லும் என்ற அடிப்படையில், இரட்டை இலை சின்னத்தை பெறுகின்ற வகையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் ஆணையம் இன்று அவைத் தலைவர் என்ற பொறுப்பை தாங்கி இருக்கும் உரிமையை தந்து, அதை செயல்படுத்தும் வடிவமாக டெல்லி சென்று திரும்பி இருக்கிறோம்.

முதல் வெற்றி
இது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி முகாமை தருகின்ற ஒரு முதல் பணியாக இந்த வாய்ப்பை நாங்கள் கருதுகிறோம். நிச்சயமாக வெற்றிவாகை சூடுவோம் என்பதையும் தெரிவிக்கிறோம்." என்றார். அப்போது அவரிடம் அவைத் தலைவர் நடுநிலை தவறியதாக ஓபிஎஸ் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதில்
இதற்கு பதிலளித்த தமிழ் மகன் உசேன், "வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சிறிதும் மீறாமல் முறைப்படி நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம். இடைத்தேர்தல் யாரும் வேட்பாளராக தன்னை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பம் செய்யவில்லை.

அதிகாரப்பூர்வ வேட்பாளர்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையின் பேரில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஈரோடு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.எஸ்.தென்னரசுவை பொதுக்குழுவே நியமனம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை அடிப்படையில்தான் நாங்கள் முறையாக நடத்தி இருக்கிறோம்." என்றார்.

ஓபிஎஸ் பிரச்சார செய்வாரா?
அப்போது செய்தியாளர், "இந்த நேரத்தில் ஓபிஎஸுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று கேட்க, "ஒன்றும் சொல்ல விரும்பவில்லை" என்றார் உசேன். "ஓபிஎஸை ஈரோடுக்கு அழைக்கிறீர்களா?" என்று செய்தியாளர் கேட்டபோது, "ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி எல்லோருக்கும் நான் தான் அழைப்பு விடுத்தேன். வாட்ஸ் அப்பிலும் சொன்னேன். தேர்தல் பிரச்சாரத்துக்கு ஓ.பி.எஸை அழைப்பது பற்றி தலைமைதான் முடிவு செய்யும்." என்றார்.












Click it and Unblock the Notifications