E20 பெட்ரோல் சர்ச்சைக்கு நடுவே விஜய் எடுத்த முடிவு.. எத்தனால் ஆலைகளை அமைப்பது குறித்து அதிரடி!
சென்னை: இப்போது நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும் எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்தே பேச்சு இருக்கிறது. மத்திய அரசு எத்தனால் கலப்பை தான் ஊக்குவித்து வருகிறது. இதற்கிடையே எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சில திட்டங்களைத் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டிலும் விஜய் அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று 2026-27இன் திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதற்கிடையே இரண்டாம் நாளான இன்று விவசாய பட்ஜெட்டை வேளான் துறை அமைச்சர் வினோத் இன்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

குறிப்பாக கரும்பு விவசாயிகள் பலன் பெரும் வகையில் சில முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இது தொடர்பாக அவர், "கரும்பு சாகுபடியில் இயந்திர அறுபடையை ஊக்குவித்து செலவுகளை குறைத்திட உயர் விளைச்சல் கரும்பு ரகங்களை நடவு செய்ய முன்வரும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு 50% மானியத்தில் நாற்று வழங்கிட மாநில நிதியில் இருந்து ரூ.9.36 கோடி வழங்கப்படுகிறது. 17,315 ஏக்கர் பரப்பளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் சாகுபடியை அதிகரிக்கவும் கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.9 கோடி மத்திய மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினசரி 100 கிலோ எத்தனாலை தயாரிக்கும் வகையில் ஆலையை அமைக்க விரிவான திட்ட அறிக்கை மற்றும் சாத்தியக்கூறு அறிக்கை அமைத்திட ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்றார்.
இப்போது நாடு முழுக்க E20 பெட்ரோல் குறித்தே பேச்சு இருக்கிறது. அந்நிய செலாவணி பாதிப்பு குறைக்க மத்திய அரசு இந்த E20 பெட்ரோலை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இருப்பினும், இதற்கு நாடு முழுக்க பரவலாக எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. பழைய வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது இல்லை என்பதால் அதில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதனால் வழக்கமான பெட்ரோலை போடும் ஒரு ஆப்ஷன் தங்களுக்கு தேவை என்பதே அவர்கள் வாதமாக இருக்கிறது.
இருப்பினும், E20 பெட்ரோலால் பெரியளவில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்றே மத்திய அரசு சொல்லி வருகிறது. மேலும், எத்தனால் உற்பத்தியையும் ஊக்குவித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதற்கட்ட விரிவான சாத்திய குறு அறிக்கையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
