காட்டுப்பன்றியை சுட்டுக்கொல்ல அனுமதி மறுப்பா? பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டம்!
சென்னை: பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில், காட்டுப்பன்றிகளை தடுக்க புதிய திட்டத்தை தவெக தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது. இதில், காட்டுப்பன்றிகளை கொல்வது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளிடையே கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. இவைகள் இயல்பாகவே கூட்டமாக வாழும் பண்பு கொண்டவை. யோசித்து பாருங்கள் கும்பலாக 30 காட்டுப்பன்றிகள் இரவோடு இரவாக நிலத்திற்குள் நுழைந்தால் என்ன ஆகும் என்று.. மொத்த விளைநிலமும் காலியாகிவிடும்.

மரவள்ளி, சர்க்கரைவள்ளி, உருளைக்கிழக்கு இதையெல்லாம் பார்த்தால்.. ட்ரீட் வைத்தது மாதிரி காட்டுப்பன்றிகள் குஷியாகிவிடும். இதுபோக சோளம், நெல், கம்பு, கரும்பு, தென்னம்பிள்ளை, வாழைக்கன்று என கண்ணில் பட்டதையெல்லாம் தின்றுவிடும். இவைகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை விட, நிலத்தில் அலைந்து திரிவதால் ஏற்படும் பாதிப்புகள்தான் அதிகம். அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை இது மொத்தமாக நாசம் செய்துவிடும்.
இதையெல்லாம் பார்த்துதான் தமிழ்நாடு அரசு, பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் காட்டுப்பன்றிகளை சுட்டு கொல்ல அனுமதி வழங்கியிருக்கிறது. அதுவும் கூட, வனத்துறையினர்தான் சுட்டுக்கொல்வதா வேண்டாமா என்கிற நடவடிக்கையை எடுக்கும். எப்படி இருப்பினும் காட்டுப்பன்றியை சுட்டுக்கொல்ல அனுமதி கொடுக்கப்பட்டதை விவசாயிகள் வரவேற்றிருந்தனர். இதனால், விளைநிலங்கள் சேதமாவது குறையும் என்று நம்பியிருந்தனர்.
இப்படி இருக்கையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், காட்டுப்பன்றிகளை விரட்ட ரூ.7.35 கோடி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் வினோத் அறிவித்திருக்கிறார்.
சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மின்வேலிகளை அமைப்பது, 50% மானிய விலையில் பன்றி விரட்டும் மருந்து வழங்குதல் ஆகியவை இந்த நிதியில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். அப்படியெனில், பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி கிடையாதா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
