5 ஆண்டுகளில் அமைச்சர்களின் சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு.. விவரம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சர்கள் தங்களின் சொத்து விவரம் அடங்கிய பட்டியலையும் வேட்பு மனுவின் போது குறிப்பிட்டுள்ளனர்.. அப்படி தாக்கல் செய்த பல்வேறு அமைச்சர்களின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்திருப்பது தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வரிசையாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள்,
அமைச்சர் தங்கமணி, அமைச்சர் சரோஜா, அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் கடம்பூர் ராஜு, அமைச்சர் ஓஎஸ் மணியன், அமைச்சர் ஆபி உதயக்குமார், அமைச்சர் செல்லூர் ராஜு உள்பட பல்வேறு அமைச்சர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு கடந்த 2016ஐ ஒப்பிடும் போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்(கோபிசெட்டிபாளையம்): கே.ஏ. செங்கோட்டையன் தனக்கு ரூ.3 கோடியே 54 லட்சம் மதிப்பு சொத்தும், மனைவி பெயரில் ரூ.82 லட்சம் என மொத்தம் ரூ.4 கோடியே 36 லட்சம் மதிப்பில் சொத்துகள் உள்ளதாக 2016ம் ஆண்டு வேட்பு மனுவில் கூறியிருந்தார். நேற்று அளித்த மனுவில், மனைவி ஈஸ்வரி, மகன் இ.எஸ்.கதிர் ஆகியோர் பெயரில் அசையும் சொத்துகளாக ரூ.5 கோடியே 68 லட்சத்து 46 ஆயிரத்து 17, அசையா சொத்துகளாக ரூ.4 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.9 கோடியே 80 லட்சத்து 96 ஆயிரத்து 17 மதிப்பில் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான சொத்துகள் அதிகரித்துள்ளது.

தங்கமணி
அமைச்சர் தங்கமணி(குமாரபாளையம்): தங்கமணி கடந்த கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்த சொத்து மதிப்பு ரூ.1 கோடி என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்போது அசையும் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 1 லட்சத்து 3,256 என்றும், அசையா சொத்து ரூ.75லட்சத்து 78,250 என்றும் தெரிவித்துள்ளார். இந்த வகையில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 76 லட்சத்து 81,250 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரோஜா
அமைச்சர் சரோஜா(ராசிபுரம்): சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, தனது அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 76 லட்சத்து 91,669 என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.33 லட்சத்து 37,000 என்றும் தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 10 லட்சத்து 28,669 என்று தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் கணவர் மற்றும் குடும்பத்தினர் பெயரில் சரோஜா ரூ.3 கோடி சொத்து மதிப்பை தாக்கல் செய்து இருந்தார்

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ(மதுரை மேற்கு): செல்லூர் ராஜூ தாக்கல் செய்த மனுவில் தனது கையிருப்பு ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 650. மனைவி ஜெயந்தி கையிருப்பு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 355. அவரிடம் 160 கிராம் தங்க நகைகள், மனைவியிடம் 400 கிராம் தங்க நகைகள், 3 கார்கள் உள்ளன. மொத்தம் சொத்து மதிப்பாக ரூ.6 கோடியே 42 லட்சத்து 73 ஆயிரத்து 355 என காண்பித்துள்ளார். கடந்த 2016 தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 18 லட்சத்து 89 ஆயிரத்து 415 எனவும், 2011 தேர்தலில் ரூ.51.83 லட்சம் என சொத்து மதிப்பு காண்பித்து இருந்தார் கடந்த தேர்தலை விட அவரது சொத்து மதிப்பு 6 மடங்கு உயர்ந்துள்ளது.

ஆர்பி உதயகுமார்
அமைச்சர் உதயகுமார்(திருமங்கலம்): அமைச்சர் உதயகுமாரின் அசையும் சொத்து விவரம்: ரூ.7 லட்சத்து 37 ஆயிரத்து 552. மனைவி தாமரைச்செல்வி பெயரில் ரூ.14 லட்சத்து 25ஆயிரத்து 50. மகள் பிரியதர்சினி பெயரில் ரூ.29 லட்சத்து 57 ஆயிரத்து 623. உதயகுமாரின் அசையா சொத்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரம். மனைவி தாமரைச்செல்வியின் அசையா சொத்து ரூ.9 லட்சம், மகள் பிரியதர்சினிக்கு உள்ள அசையா சொத்து ரூ.1 கோடியே 8 லட்சம் (டிரஸ்ட்).

அன்பழகன்
அமைச்சர் அன்பழகன்(பாலக்கோடு): தனது பெயரில் அசையும் சொத்து ரூ.64,71,739, அசையும் சொத்து ரூ.55,00,000 மதிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மனைவி, மகன்கள், மகள் பெயரில் ரூ.1.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஓ.எஸ்.மணியன்
அமைச்சர் கடம்பூர் ராஜூ(கோவில்பட்டி): அமைச்சர் கடம்பூர் ராஜூ தனக்கு அசையும் சொத்தாக ரூ.32 லட்சத்து 18 ஆயிரத்து 661, அசையா சொத்தாக ரூ.15 லட்சம் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். ஓ.எஸ்.மணியன்(வேதாரண்யம்): ரொக்கமாக ரூ.4,84,983 உள்ளது. பல்வேறு வங்கிகளில் வைத்து சேமிப்பு பணம் என அசையும் சொத்துக்கள் ரூ.1.13 கோடி உள்ளது. 2016 தேர்தலில் அசையும் சொத்தாக ரூ.23,15,311 இருந்தது. நிலம், பூர்வீக சொத்து மதிப்பு ரூ.28,78,260.












Click it and Unblock the Notifications