பெருசா ஒன்னுமில்லை..85% வாக்குப்பதிவு! வரலாறு காணாத சாதனையா? பழைய தேர்தல் கணக்குகள் என்ன சொல்கின்றன?
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவு தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனையை படைக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த முறை மாநிலம் முழுவதும் ஏறக்குறைய 85 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சில தொகுதிகளில் 90 சதவீதத்தைக் கூட தாண்டியிருக்கலாம் என்ற மதிப்பீடுகளும் வெளியாகி வருகின்றன.
இதனால், "தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வாக்குப்பதிவு" என்ற விவாதம் கிளம்பியுள்ளது. ஆனால் உண்மையில் இந்த தேர்தலை "வரலாறு காணாதது" என்று சொல்ல வேண்டுமெனில், மொத்த வாக்குப்பதிவு 88 முதல் 90 சதவீதத்தை தாண்ட வேண்டும் என தேர்தல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த தேர்தல்களின் கணக்குகளை பார்த்தால், வாக்குப்பதிவு எப்படி உயர்ந்து வந்துள்ளது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தமாக சுமார் 4.74 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதில் 2.80 கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல்
அப்போது மொத்த வாக்குப்பதிவு சுமார் 59.07 சதவீதம் மட்டுமே இருந்தது. அதன்பிறகு 2006 தேர்தலில் வாக்குப்பதிவு கணிசமாக உயர்ந்தது. அப்போது சுமார் 3.28 கோடி பேர் வாக்களித்து, 70.56 சதவீதம் பதிவு செய்யப்பட்டது. முந்தைய தேர்தலை விட சுமார் 48 லட்சம் வாக்குகள் அதிகமாக பதிவானது குறிப்பிடத்தக்கது.
2001 முதல் 2021 வரை வாக்குப்பதிவு
2011 தேர்தலில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 3.68 கோடி பேர் வாக்களித்தனர். அப்போது மொத்த வாக்குப்பதிவு 78.29 சதவீதம் என உயர்ந்தது. இது அந்த காலத்தில் மிக உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதங்களில் ஒன்றாகும். பின்னர் 2016 தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், 5.77 கோடி வாக்காளர்களில் 4.32 கோடி பேர் வாக்களித்தனர். அப்போது 74.81 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. அந்த தேர்தலில் மட்டும் சுமார் 64 லட்சம் கூடுதல் வாக்குகள் பதிவானது ஒரு விதிவிலக்காக பார்க்கப்பட்டது.
2021 தேர்தல்
அதேபோல் 2021 தேர்தலில் 6.29 கோடி வாக்காளர்களில் 4.58 கோடி பேர் வாக்களித்து, 73.63 சதவீதம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த தேர்தல் கொரோனா காலத்தில் நடைபெற்றதால், பலர் வாக்களிக்க வராத சூழல் இருந்தது என்பதும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த தேர்தல்களின் போக்கை கவனித்தால், ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்தது 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை கூடுதல் வாக்குகள் பதிவாகுவது இயல்பான வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. 2016 தேர்தலில் மட்டும் சுமார் 64 லட்சம் கூடுதல் வாக்குகள் பதிவானது ஒரு விதிவிலக்காக இருந்தது.
40 லட்சம் கூடுதல்
இந்த நிலையில், 2026 தேர்தலில் சுமார் 5 கோடி வாக்குகள், அதாவது 87 சதவீதம் வரை பதிவானாலும், அது 2021 தேர்தலை விட சுமார் 40 லட்சம் கூடுதல் வாக்குகள் மட்டுமே ஆகும். இது கடந்த கால வளர்ச்சி போக்கோடு ஒத்துப்போகும் அளவிலேயே இருக்கும். அதனால், இதை உடனே "வரலாறு காணாத சாதனை" என்று கூறுவது சரியாக இருக்காது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேர்தல் ஆணையம்
மேலும் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், கடந்த தேர்தல்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு சதவீதத்தை உடனுக்குடன் வெளியிடாமல், குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மட்டுமே வெளியிட்டு வந்தது. இதனால் மாலை 6 மணிக்குப் பிறகு இறுதி கணக்குகள் வெளியானபோது 7 முதல் 10 சதவீதம் வரை திடீர் உயர்வு ஏற்பட்டது போல தோன்றியிருக்கிறது. ஆனால் இந்த முறை தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை துல்லியமான தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
வரலாறு காணாத வாக்குப்பதிவு
அதனால் மாலை 6 மணிக்குக் கிடைக்கும் சதவீதமே பெரும்பாலும் இறுதி எண்ணிக்கைக்கு மிக அருகில் இருக்கும். அதிகபட்சம் 2 முதல் 3 சதவீதம் வரை மட்டுமே மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. மொத்தத்தில் பார்க்கும்போது, 2026 தேர்தலில் வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றது உறுதியாக இருந்தாலும், அதை "வரலாறு காணாத வாக்குப்பதிவு" என்று அழைக்க வேண்டுமெனில், இறுதி சதவீதம் 88-90 சதவீதத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த தேர்தல்களின் இயல்பான வளர்ச்சி தொடர்ச்சியாகவே கருதப்படும் என்பது தான் நிபுணர்கள் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications