அதிமுக கூட்டணியில் அன்புமணி.. பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும்? கசிந்த முக்கிய மேட்டர்
சென்னை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை இன்று அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். மேலும் கூட்டணியில் பாமகவுக்கு 17 முதல் 20 சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அன்புமணி ராமதாஸின் பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும்? என்பது பற்றிய சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் தற்போது பாமக 2 அணியாக செயல்பட்டு வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இருவரும் தாங்கள் தான் உண்மையான பாமக என்று கூறி வருகின்றனர்.

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாமகவின் நிலை என்னவாகும்? இருவரும் இணைவார்களா? இல்லையா? என்ற கேள்வி உள்ளது. இதற்கிடையே தான் அன்புமணி ராமதாஸ் இன்று அதிமுக - பாஜக கூட்டணியில் ஐக்கியமானார். இன்று காலையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அன்புமணி ராமதாஸ் கூட்டணியை உறுதி செய்தார்.
இதன்மூலம் மீண்டும் அதிமுக - பாமக கூட்டணியை அன்புமணி ராமதாஸ் உறுதி செய்துள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‛‛ தொகுதிகள் ஏற்கனவே முடிவாகிவிட்டது. அதுபற்றிய விவரத்தை பிறகு அறிவிப்போம்'' என்றார். இப்படியான சூழலில் தான் தற்போது அன்புமணி ராமதாஸ்க்கு ஒதுக்கப்படும் சட்டசபை தொகுதிகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
அதாவது கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாமக - அதிமுக கூட்டணியில் தான் இருந்தது. அப்போது மொத்தம் 23 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி மேட்டூர், சோளிங்கர், சேலம் மேற்கு, சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, கீழ்வேளூர், கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாச்சலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், செஞ்சி, மயிலம், ஜெயங்கொண்டம்,, திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, ஆத்தூர் என மொத்தம் 23 தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் களமிறங்கினர்.
இதில் தர்மபுரியில் வெங்கடேஸ்வரம், மயிலத்தில் சிவக்குமார், மேட்டூரில் சதாசிவம், பென்னாகரத்தில் ஜிகே மணி, சேலம் மேற்கில் அருள் என மொத்தம் 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இதில் தற்போது 3 எம்எல்ஏக்கள் அன்புமணிக்கு ஆதரவாகவும், 2 எம்எல்ஏக்கள் ராமதாஸ்க்கு ஆதரவாகவும் உள்ளனர். இந்நிலையில் தான் கடந்த முறை பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலேயே தற்போதும் பெரும்பாலான தொகுதிகளை மீண்டும் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் தற்போதைய சூழலில் ராமதாஸின் நிலைப்பாடு என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. அவர் அதிமுக கூட்டணியில் கைகோர்க்கிறாரா? இல்லாவிட்டால் திமுக கூட்டணியை நோக்கி செல்கிறாரா? என்பது இன்னும் தெளிவாகவில்லை. அதிமுக - பாஜக சார்பில் ராமதாஸையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிக்கப்படுகிறது. அவரும் கூட்டணிக்கு வரும் பட்சத்தில் பாமகவுக்கான தொகுதி எண்ணிக்கை 17ல் இருந்து 20 ஆக அதிகரிக்கலாம். இல்லாவிட்டால் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு 17 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.












Click it and Unblock the Notifications