ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக, தேமுதிக வரிசையில் பாஜக புறக்கணிப்பு!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிவித்துள்ளது. ஈரோடு தொகுதி இடைத்தேர்தலை ஏற்கனவே அதிமுக, தேமுதிக புறக்கணித்துள்ள நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக vs நாம் தமிழர் கட்சி என இருமுனைப் போட்டி நிலவுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பிப்ரவரி 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

2021 முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை ஆளும் திமுகவே களம் காண்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திமுக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது. அதேபோல அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் புறக்கணித்ததால் திமுக vs நாம் தமிழர் கட்சி என இருமுனைப் போட்டி நிலவுகிறது..
அதேநேரத்தில் அதிமுகவின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா? பாஜக புறக்கணித்தால் அந்த கட்சியின் வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாஜக புறக்கணிப்பு ஏன்?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. ஆளுங்கட்சி என்ற மமதையில் திமுக, தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டது. திராவிட மாடல் ஆட்சி அல்ல.. பேரழிவு மாடல் என்பது மக்கள் கருத்து. இடைத்தேர்தல்களில் கால்நடைகளைப் போல பொதுமக்களை அடைத்து வைப்பதை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை. 2023 இடைத்தேர்தலில் திமுக எல்லை மீறி செயல்பட்டதை அனைவரும் பார்த்தோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் பொதுமக்களை கால்நடைகளைப் போல திமுக அடைப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதனால்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications