ஸ்டாலினை பார்த்து இப்படி நக்கலா பேச முடியுமா? அன்னபூர்ணா விவகாரத்தில் முதல்வர் மீது பாஜக பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில்துறையினர் மீது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்தால் மின் கட்டணம், சொத்து வரியை குறைக்க வேண்டும். அதைவிடுத்து நல்லது செய்ய வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அரசியலுக்காக விமர்சித்து திசை திருப்ப வேண்டாம் என்று தமிழக பாஜக விமர்சித்துள்ளது.

கோவை கொடிசியாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொழில் துறையினர், வர்த்தகர்கள் கடந்த 11 ஆம் தேதி கலந்துரையாடினர். இதில் அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பங்கேற்றுப் பேசினார். அவர் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி பேசினார்.

nirmala sitharaman coimbatore mk stalin


அன்னபூர்ணா சீனிவாசன் பேசுகையில், “பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி, உள்ளே இருக்கும் கிரீமுக்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கிரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி அதிகம். இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது. கஸ்டமர் பன் மட்டும் எடுத்துட்டு வாங்க, கிரீம், ஜாம் நாங்க போட்டுக்கிறோம் என்கிறார்கள், கடை நடத்த முடியல மேடம். அதனால், ஜி.எஸ்.டி வரியை ஒரே மாதிரி ஆக்கிவிடுங்கள். ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள்” எனப் பேசினார். அவரது இந்த பேச்சு வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது.

அதன்பிறகு நேற்று முன்தினம் மாலையில் இன்னொரு வீடியோ வெளியானது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுடன் அமர்ந்து இருக்க அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் அவர்களை சந்தித்தார். அப்போது நிர்மலா சீதாராமனிடம் அவர், “நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்” என எழுந்து கைக்கூப்பி மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானது. ஜிஎஸ்டியில் உள்ள குறையை கூறிய அன்னபூர்ணா சீனிவாசனை பாஜகவினர் மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்டு அவமானப்படுத்தி உள்ளதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினரும், தொழில் துறையினரும் குற்றம்சாட்டினர். ராகுல் காந்தி வரை இந்த சம்பவத்தை விமர்சனம் செய்தனர். இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியிடப்பட்டதற்கு மன்னிப்பு கோரியதோடு, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்தார்.

இந்நிலையில் அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து இன்று தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கோரிய விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின், “ஜிஎஸ்டி குறித்து தொழில் முனைவோர் சார்பில் நியாயமான கோரிக்கையை அவர் முன்வைத்தார். அதனை மத்திய அமைச்சர் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டியது. மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறினார்.

இந்நிலையில், தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியார்களிடம் பேசும்போது, 'ஜிஎஸ்டி குறித்த தொழிமுனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவிலேயே தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட கொங்குமண்டலத்தின் தொழில் வளர்ச்சிதான் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு அரசின் பங்களிப்பு தனிப்பட்ட நபர்களின் தொழில் ஆர்வமும், சமூதாயமாக இணைந்து தொழிலில் ஈடுபட்டதும் மிக முக்கியமான காரணம். இப்போது தொழில் துறையில் மற்ற மாநிலங்களும் வேகமாக முன்னேறி வருகின்றன. திமுக அரசு மின் கட்டணம், சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் கோவையில் தொழில்துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்தச் சூழலில்தான் தொழில் துறையினரின் கோரிக்கைகளை நேரில் கேட்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வருகை தந்தார். அப்போது ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் பேசியது விவகாரத்தை பெரிதாக்கி மீண்டும் பிரிவினை அரசியலை திமுக கையிலெடுத்துள்ளது. நிர்மலா சீதாராமன் கோவைக்கு நேரில் வந்து தொழில் துறையினரின் குறைகளை கேட்டது தவறு என்கிறாரா முதல்வர் ஸ்டாலின்? ஜிஎஸ்டி வரி என்பது மத்திய அரசு விதிக்கும் வரி அல்ல. மாநிலங்களும் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில்தான் விவாதம் நடத்தி ஒவ்வொரு பொருளுக்குமான வரி விகிதத்தை தீர்மானிக்கிறது.

பெரும்பான்மை மாநிலங்களின் ஆதரவு இல்லாமல் எந்தப் பொருளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது. இது தெரிந்தும் முதல்வர் ஸ்டாலின், நிர்மலா சீதாராமனை ஏன் விமர்சிக்க வேண்டும். டெல்லியில் இருந்து வந்து நிர்மலா சீதாராமன் தொழில் துறையினர் கூட்டத்தை கூட்டி கேள்வி கேளுங்கள். பதில் சொல்கிறேன் என்கிறார். அதுபோன்றதொரு கோரிக்கை, குறை கேட்பு கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டியிருக்கிறாரா? அப்படியே கூட்டம் நடத்தினாலும் முதல்வர் ஸ்டாலினை நோக்கி நக்கலாக கேள்வி கேட்க முடியுமா?

சிறு பிரச்சனையை ஊதி பெரிதாக்கி ஆதாயம் தேடும் முயற்சி வெற்றி பெறாது என்பதை முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்த விரும்புகிறேன். தொழில் துறையினர் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு உண்மையான அக்கறை இருந்தால் மின் கட்டணம், சொத்து வரியை குறைக்க வேண்டும். அதைவிடுத்து அரசியலுக்காக நல்லது செய்ய வந்த நிர்மலா சீதாராமனை விமர்சித்து திசை திருப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+