அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செக்? ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்த அண்ணாமலை! மீட்டிங்கில் என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தவும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் இருந்து அமைச்சர் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேசினார். அரைமணிநேரத்துக்கு மேலாக நடந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். இவருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில் தான் கோவையில் நேற்று முன்தினம் கோவையில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் முடிந்த பிறகு அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛தமிழ்நாட்டில் பட்டித்தொட்டி எங்கும் கள்ளச்சாராயம் புழங்க துவங்கி உள்ளது. இதன் வெளிப்பாடாக தான் விழுப்புரம் பகுதியில் உயிரிழப்புகள் நடந்துள்ளன. ஒரு பக்கம் டாஸ்மாக்கில் வெள்ளம் போல சாராயம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அதற்கு அடிமையானவர்கள் கள்ளச்சாரயத்தின் பக்கம் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த இரண்டையும் கண்டிக்கிறோம்'' என்றார்.
மேலும் ‛‛மே 21ம் தேதி ஆளுநர் ஆர்என் ரவியை ராஜ்பவனில் சந்தித்து கள்ளச்சாரய விற்பனையை கட்டுப்படுத்தும் விஷயத்தில் ஆளுநர் நேரடியாக தலையிட வேண்டும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் பாஜக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர முடியாது. இதனால் அவரை நீக்க ஆளுநர் முதலமைச்சருக்கு வலியுறுத்த வேண்டும்'' என்றார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலை, சட்டசபை பாஜக எம்எல்ஏக்கள் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து மனு அளித்தனர். இந்த சந்திப்பு என்பது 30 நிமிடங்களுக்கும் மேலாக நடந்தது. அதன்பிறகு ஆளுநர் ஆர்என் ரவி உடனான சந்திப்பில் சந்திப்பில் என்ன நடந்தது? என்பது பற்றி அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஆதிக்கம் எப்படி உள்ளது என்பது பற்றி ஆளுநர் ஆர்என் ரவியிடம் எடுத்து கூறியுள்ளோம். டாஸ்மாக் வருமானத்துக்கு பதில் மாற்று வருமானத்தை எப்படி கொண்டு வருவது என்பது பற்றி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக 15 நாட்களில் தமிழக அரசிடம் வெள்ளை அறிக்கை வழங்குவதாக கூறினோம். 2வதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் தெரிவிக்க வேண்டும் என கூறினோம். இதுதொடர்பாக மனு அளித்தோம்.
2016ல் போக்குவரத்து துறையில் கண்டக்டர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடந்தது. அப்போதைய அதிமுக போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தார். பணி வழங்குவதாக பணம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக், உதவியாளர் சண்முகம், ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே திமுக ஆட்சியில் செந்தில் பலாாஜி மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ளார்.
இதையடுத்து வழக்கு தொடர்பாக சமரசம் செய்து கொண்டதாக சண்முகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வாங்கிய பணத்தை திரும்ப வழங்கி சமரசம் செய்ததாக கூறினார். இதையடுத்து சென்னை நீதிமன்றம் வழக்கில் இருந்து அவர்களை விடுவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. அமைச்சர் பணம் வாங்கியதே முறைகேடு தான். அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கலாம். தமிழக அரசும் 2 மாதத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் என கூறியுள்ளது. இதனால் அவரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க முதல்வருக்கு அறிவுறுத்த வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications