தமிழக பட்ஜெட் 2025: வரி வருவாய் 45.6 பைசா..கடன் 31.4 பைசா! ஒரு ரூபாயில் தமிழகத்தின் வரவு செலவு என்ன?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். தனது பட்ஜெட் உரையின் இறுதியில் வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் குறித்தும், வருவாய் செலவினங்கள் குறித்தும் அமைச்சர் விரிவாக எடுத்துரைத்திருந்தார். இந்த நிலையில் ஒரு ரூபாயில் தமிழக அரசின் பட்ஜெட் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2025 2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று தமிழகத்தின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார்.

இந்த பட்ஜெட்டில் மகளிர் நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தனது பட்ஜெட் உரையின் இறுதியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வருவாய் செலவினங்கள் குறித்து தெரிவித்திருந்தார். அதில்," 2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 30,728 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளில் 28,124 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 28,819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வருவாய் மதிப்பீடான 249,713 கோடி ரூபாய் மொத்த வருவாய் வரவுகளில் 75.31 சதவீதத்தைக் கொண்டிருக்கும்.

அரசின் பெருமுயற்சிகளால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்து வரும் அதே வேளையில், ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள், ஒன்றிய வரிகளில் பங்கு ஆகியவை மொத்த வருவாய் சதவீதத்தில் குறைந்துகொண்டே வந்துள்ளன. ஒன்றிய அரசு. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை விடுவிக்க மறுத்ததும், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகிய இரு தொடர் பேரிடர்களின் நிவாரணப் பணிகளுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்ததும் மாநில அரசின் நிதிநிலையை வெகுவாகப் பாதித்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய தொகைகளின் விகிதம் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாகவும் மிக அதிக அளவிலும் வீழ்ச்சியடைந்து வரும் வேளையில் 2016-17 ஆம் ஆண்டில் 3.41 சதவீதத்திலிருந்து, 2024-25 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீட்டில் 196 சதவீதமாக கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், இந்த 145 சதவீதம் குறைவினால் மாநில அரசிற்கு ஏற்படக்கூடிய 45,182 கோடி ரூபாய் இழப்பானது 2024-25 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் மதிப்பிடப்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையில் ஏறத்தாழ 44.43 சதவீதத்திற்கு சமமாகும்.

2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 299,009 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவினங்கள் திருத்த மதிப்பீடுகளில் 293,906 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் வரவினங்கள் 3,31,569 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, திருத்த மதிப்பீடுகளைவிட 12.81 சதவீதம் அதிகமாகும்
செலவினங்களைப் பொறுத்தவரை, 2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 3,48,289 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் செலவினங்கள், வளர்ச்சிப் பணிகள் சாரா செலவினங்கள் குறைந்ததன் காரணமாக, திருத்த மதிப்பீடுகளில் 3,40,374 கோடி ரூபாயாகக் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் செலவினங்கள் 3,73,204 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளைவிட 9.65 சதவீதம் வளர்ச்சி கொண்டதாகும்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் ஒரு ரூபாயில் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 45.6 பைசாவாகவும். பொது கடன் 31.4 பைசாவாகவும் இருக்கிறது. கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு 0.2 பைசாவாகவும், மத்திய அரசிடம் இருந்து பெரும் உதவி மானியங்கள் 4.0 பைசாவாக இருக்கிறது. மத்திய வரிகளின் பங்கு 12.0 பைசாவாகவும், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 5.9 பைசாவாகவும் இருக்கிறது.
செலவுகளை பொறுத்தவரை ஒரு ரூபாயில் செயல்பாடுகளுக்கும் பராமரிப்புகளுக்கும் 3.5 பைசாவும், கடன்களை திருப்பி செலுத்துவதற்கு 9.7 பைசாவும், சம்பளங்களுக்கு 18.6 பைசாவும் செலவாகிறது. மேலும் வட்டி செலுத்துதலுக்கு 14.5 பைசாவும், உதவித்தொகைகள் மானியங்களுக்கு 31.6 பைசாவும், கடன் வழங்குதலுக்கு 1.8 பைசாவும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்களுக்கு 8.5 பைசாவும் செலவிடப்படுகிறது.












Click it and Unblock the Notifications