7 சிக்ஸ்.. 8000 உதவி தொகை! பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் அறிவிப்புகள்! சிஎம் விஜய் போட்ட மெகா ப்ளான்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் முதல் பட்ஜெட்டில் முக்கியமான சில திட்டங்கள் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான7.5% இட ஒதுக்கீடு 10% உயர்த்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு தகவல் திட்டங்கள் அதில் இடம்பெற இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் சொல்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய், 2026- 2027ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார். இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் வில்சன் தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்த நிலையில் பட்ஜெட்டை ஒட்டி கடந்த சில தினங்களாகவே சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக பட்ஜெட்
ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
இறுதிக்கட்ட பணிகள்
தொழில் வளர்ச்சி, புதிய முதலீடுகள், தொழிற்சாலைகளுக்கு அனுமதி, உட்கட்டமைப்பு மேம்பாடு, மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆகஸ்ட் முதல் முதல் வாரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மாதம் 2500 ரூபாய்
இந்த நிலையில் இந்த பட்ஜெட்டில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற பல முக்கிய வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் சொல்கின்றன. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கும் திட்டம், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர், திருமண உதவியாக ஒரு சவரன் தங்கம் பட்டுச்சேலை, மாணவர்களுக்கு கல்விக்கடன், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம் பெற இருப்பதாக சொல்லப்படுகிறது.
7.5% சதவீத ஒதுக்கீடு
இது ஒருபுறம் இருக்க பட்ஜெட்டில் மேலும் சில அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு அரசு பள்ளிகளில் படித்து அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு 7.5% சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மாதம் 8000 ரூபாய்
அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு பள்ளிகளில் படித்து அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் 8000 ரூபாய் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் 30 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளை தன்னாட்சி கல்லூரிகளாக மாற்றும் திட்டமும் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என சொல்கின்றனர்.
தமிழக அரசு
விண்வெளி துறையில் பள்ளி மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்கள் உருவாக்கும் செயற்கைக்கோளுக்கான நிதியை தமிழக அரசே வழங்கும் எனவும், தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, நீட் தேர்வு போன்ற கல்வி தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்க பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் பனை மரத்தை பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவிக்கவும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவும் விஜய் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
