தமிழ்நாடு பில்டிங் ரூல்ஸ் 2026.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. சென்னைக்கு டபுள் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டிட அனுமதி பெறுவதில் சென்னையைச் சேர்ந்த கட்டுமானத் துறையினர் இரட்டைச் சிக்கல்களைச் சந்தித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. தமிழக அரசு அண்மையில் ஒற்றைச் சாளரத் திட்டத்தின் கீழ் கட்டிடத் திட்ட அனுமதி விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. ஆனால் அதற்கு ஏற்பே அரசின் இணையதளத்தின் மென்பொருளை சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் இன்னும் அப்டேட் செய்யவே இல்லை. மறுபுறம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தற்போதைய இணையதளத்திலும் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுகிறது. அதிலும் விண்ணப்பங்கள் பல்வேறு நிலைகளில் முடங்கியே இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்த இரண்டு பிரச்சினைகளும் விரைவாக கட்டிட அனுமதி வழங்கிட வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்தையே சீர்குலைப்பதாகக் கட்டுமானத் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் திட்டப் பணிகளில் தாமதம் ஏற்படுவதுடன், நிதிச் செலவுகள் அதிகரித்து, புதிய கட்டுமானத் திட்டங்களைத் தொடங்குவதும் பாதிக்கப்படுவதாக கட்டுமானத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tamil Nadu building rules 2026

தமிழக அரசு 179, 180 மற்றும் 194 ஆகிய அரசாணைகளை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் கட்டிட அனுமதிக்கு மூன்றாம் தரப்புச் சான்றளிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரம் அதிகரிக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட வகை கட்டிடங்களுக்கான அனுமதிக்கப்பட்ட உயர வரம்பும் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த மாற்றங்கள் இன்னும் இணையவழி கட்டிடத் திட்ட அனுமதி அமைப்பில் நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. அதாவது ஏட்டளவில் அனுமதியாகவும், செயல் அளவில் இல்லை என்றும் புகார் கூறுகிறார்கள்.

தமிழக அரசின் அரசாணை 179-ன்படி, பதிவு செய்யப்பட்ட ஆர்கிடெக்ஸ்ட் மற்றும் கிரேடு-1 என்ஜினியர்கள் குறிப்பிட்ட வகையான குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை கட்டிடங்களுக்கு சான்றளிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் தமிழக அரசின் அரசாணை 180-ன்படி, 1,500 சதுர மீட்டர் FSI வரையிலான குடியிருப்புத் திட்டங்களுக்கும், 500 சதுர மீட்டர் FSI வரையிலான வணிகக் கட்டிடங்களுக்கும் அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுடிருக்கிறது.

அத்துடன் அரசாணை 194-ன்படி, குறிப்பிட்ட கட்டிடங்களுக்கான உயர வரம்பு 18.3 மீட்டரில் இருந்து 19.5 மீட்டராக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. மேலும், சாலை அகலம், கட்டிடத்தின் பக்கவாட்டு இடைவெளி (Setback) மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடர்பான விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இந்திய கட்டுமானத் துறையினர் சங்கத்தின் (BAI) எஸ். ராமபிரபு டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "அரசு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளத்தின் மென்பொருளை அரசு புதுப்பித்திருக்க வேண்டும். அரசு வெப்சைட்டுகளை அப்டேட் செய்யாத காரணத்தால் 1,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தற்போது முடங்கிக் கிடக்கின்றன. திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி எங்களால் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை. அரசு அறிவித்துள்ள தளர்வுகளையும் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது" என்றார்.

இதற்குப் பதிலளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், இணையதள மென்பொருள் விரைவில் புதுப்பிக்கப்படும் என்று கூறினார். இதற்கிடையே, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) தற்போதைய இணையவழி கட்டிட அனுமதி அமைப்பிலும் கட்டுமானத் துறையினர் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது

இதுதொடர்பாக, கிரெடாய் சென்னை (CREDAI Chennai) அமைப்பு அக்டோபர் 26-ஆம் தேதி CMDA-வுக்கு அளித்துள்ள மனுவில், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது, ஆவணங்கள் மற்றும் திருத்தப்பட்ட வரைபடங்களைப் பதிவேற்றுவது, சட்டப்பூர்வ தடையின்மைச் சான்றிதழ்களைப் பெறுவது, கட்டணங்களைச் செலுத்துவது, விண்ணப்பங்களின் நிலையைத் தெரிந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருக்கிறது. கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) விண்ணப்பங்களுக்கான ஒப்புகை வழங்குவதிலும், அத்தியாவசியச் சேவைகளைப் பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகள் அவ்வப்போது ஏற்படுபவை மட்டுமல்ல. குறிப்பிட்ட சில விண்ணப்பங்களில் மட்டுமே இந்தப் பிரச்சனை இருப்பதில்லை. ஆரம்பக்கட்ட விண்ணப்பச் சமர்ப்பிப்பு, பரிசீலனை, கட்டணம் செலுத்துதல், ரசீது பெறுதல், டிஜிட்டல் கையொப்பம், திட்ட அனுமதி வழங்குதல் என கிட்டத்தட்ட ஒவ்வொரு நிலையிலும் பிரச்சினைகள் உள்ளது. அதேபோல், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கான நிறைவுச் சான்றிதழ் விண்ணப்பங்கள் மற்றும் அவற்றுக்கான ஒப்புதல் வழங்குவதிலும் சிக்கல்கள் உள்ளன.

கட்டிட நிறைவுச் சான்றிதழைப் பெற்ற பிறகும், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளைப் பெறுவதற்காக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தை அணுகும்போது, சிஎம்டிஏ செலுத்த வேண்டிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். இணையதளத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் குறைபாடுகளால் ஏற்படும் தாமதங்களுக்கு விண்ணப்பதாரர்களிடம் வட்டி அல்லது அபராதம் வசூலிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய தமிழக அரசு தலையிட வேண்டும்" என்றார்.

இதுகுறித்து சிஎம்டிஏவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தலைமைத் திட்ட அதிகாரி மற்றும் மூத்த திட்ட அதிகாரி (மின் ஆளுமை) தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏஐ அடிப்படையிலான புதிய இணையவழி திட்ட அனுமதி அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட உள்ளது" என்று கூறினார்.

அரசு இந்த விவகாரத்தில் நான்கு சிக்கல்களை சந்தித்துள்ளது. பல விண்ணப்பங்கள் புதிய அரசாணைகள் வருவதற்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் எவை பழைய விதிகளின்படி பரிசீலிக்கப்பட வேண்டும், எவை புதிய விதிகளின்படி பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை அரசு முதலில் தீர்மானிக்க வேண்டும். எனவே முன்பு கட்டணம் செலுத்திய விண்ணப்பங்களையும் திருத்தப்பட்ட வரைபடங்களையும் எவ்வாறு கையாள்வது என்பதை அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்.

அடுத்ததாக சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, டிடிசிபி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகள் ஒரே மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பில் இல்லை. அவற்றின் அதிகார வரம்பு, விண்ணப்பப் பரிசீலனை நடைமுறை, கட்டணங்கள் ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளது. இதையும் கவனிக்க வேண்டும். அதேபோல் கட்டிட அனுமதிக்கு ஒரே ஒரு துறையின் ஒப்புதல் மட்டும் போதுமானதாக இருப்பது கிடையாது. பல்வேறு துறைகளின் சான்றிதழ்களும் தேவைப்படுகிறது. ஒரு துறையின் சாப்ட்வேரில் பிரச்சனை என்றாலும் விண்ணப்பம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருவதே இல்லை.

அதேபோல் ஏற்கனவே சிஎம்டிஏ இணையதளத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளன. விண்ணப்பம் சமர்ப்பித்தல், ஆவணப் பதிவேற்றம், கட்டணம் செலுத்துதல், டிஜிட்டல் கையொப்பம், நிறைவுச் சான்றிதழ் போன்ற பல நிலைகளில் கோளாறுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த சூழலில் இப்போது புதிய விதிகளும் வந்துள்ளன. எனவே அனைத்து மாற்றங்களையும் அரசு உடனே செய்ய வேண்டும்.

அரசு புதிய AI இணையதளத்தை உருவாக்குகிறது என்றாலும், அந்த இணையதளம் வரும் வரை காத்திருக்காமல் தற்போதைய அமைப்பிலேயே இடைக்காலத் தீர்வுகளை உடனே செயல்படுத்தினால் பில்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, புதிய விதிகளின்படி தகுதியுள்ள விண்ணப்பங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்க முடியாத நிலையில், அவற்றைப் பெறுவதற்கான மாற்று வழிமுறையை அரசு அறிவிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+