இடைத்தேர்தலை விடக்கூடாது.. அதிமுகவிற்காக களமிறங்கிய பாஜக.. வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே பணிக்குழு
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை லேசாக எடுத்து கொள்ளக்கூடாது. அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தேர்தல் பணிக்குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமாரவேல், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே இருவரும் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைந்தனர்.

இந்நிலையில் தான் தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 9 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தற்போது திமுக மற்றும் தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மீண்டும் மரகதம் குமாரவேல், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
இந்த 2 தொகுதிகளிலும் அதிமுகவில் நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால் இடைத்தேர்தலில் இந்த தொகுதிகளை கைப்பற்ற அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. அதிமுக சார்பில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் தான் அதிமுகவிற்கு பாஜக மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தான் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றிக்கு உழைக்க பாஜக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ''தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவானது வருகின்ற அக்டோபர் 6ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அவர்களை வெற்றி பெறச் செய்ய தமிழக பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணி செய்ய உள்ளது.
இந்த இடைத்தேர்தல் பணிகளை கருத்தில் கொண்டு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்
மதுராந்தகம் சட்டசபை தொகுதியின் பொறுப்பாளர்களாக பாஜகவின் தேசிய செயலாளர் மா வெங்கடேசன், மாவட்ட தலைவர் பிரவீன் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் விஏடி கலிவரதன் ஆகியோர் செயல்பட உள்ளனர். தாராபுரம் தொகுதியின் பொறுப்பாளராக மாநில செயலாளர் ஆர் நந்தகுமார், பாஜக மருத்துவ பிரிவு மாநில அமைப்பாளர் எஸ்டி பிரேம் குமார் உள்ளிட்டோர் செயல்பட உள்ளனர்'' என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
