கம்யூனிஸ்ட்கள் தனி ஆட்டம்.. திமுக, அதிமுகவை விடுங்க, தவெக அரசுக்கு தலைவலியாகும் "தோழர்களின்" பிளான்?
சென்னை: தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தனிப்போட்டி தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதால், இந்த முடிவு எந்த கட்சியின் தேர்தல் கணக்கை அதிகமாக மாற்றப்போகிறது என்பதுதான் இப்போது முக்கிய கேள்வியாக உள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக விவாதிப்போம்...!!
இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து களம் காண்பது அரசியல் பார்வையாளர்களால் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்... தங்களது தனி அரசியல் அடையாளத்தையும் கொள்கை நிலைப்பாட்டையும் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

கம்யூனிஸ்ட்கள் போட்டி
இருந்தாலும் 2 தொகுதிகளிலும் போட்டி நெருக்கமாக இருக்கும் நிலையில், சில ஆயிரம் வாக்குகள் கூட வெற்றி தோல்வியை தீர்மானிக்கலாம் என்பதால், இந்த தனிப்போட்டி யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்ற கணக்கீடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இடதுசாரி சிந்தனை கொண்ட வாக்காளர்கள் மத்தியில் பாரம்பரிய ஆதரவு உள்ளது. இந்தத் தேர்தலில் அந்த ஆதரவு எந்த அளவுக்கு வாக்குகளாக மாறுகிறது என்பதுதான் முக்கியம். அந்த வாக்குகள் தனியாகப் பிரியும் நிலையில், திமுக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தேர்தல் கணக்கில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது.
திமுக, அதிமுக வாக்குகளை பிரிக்குமா
அரசியல் பார்வையாளர்களின் ஒருதரப்பு கணிப்புப்படி, கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரி ஆதரவு வாக்குகள் இந்த முறை தனியாகச் செல்லும் வாய்ப்பு உள்ளது. அப்படி திமுகவின் கணக்கில் இருந்து வாக்குகள் விலகினால், அதன் பலன் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு கிடைக்கலாம் என்கிறார்கள். அதே நேரத்தில், கம்யூனிஸ்ட்களுக்கு செல்லும் வாக்குகளில் ஒரு பகுதி தவெக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் கணக்கையும் மாற்றுமா என்பதும் இந்தத் தேர்தலில் தெரியவரும்.
ஆனால் இதைத் தாண்டி, தவெக அரசுக்கும் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சியில் இருக்கும் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளே இப்போது தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிடுகின்றன. மதச்சார்பற்ற நிலைப்பாடு, ஏழை எளிய மக்களின் பிரச்சினைகள், தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் கலாச்சாரம் போன்றவற்றை பிரச்சாரத்தில் முன்வைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாராபுரம், மதுராந்தகம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. அங்கு தனியார்மயக் கொள்கை குறித்து கம்யூனிஸ்ட்கள் பேசும்போது, அது வெறும் தேர்தல் பிரச்சாரமாக இல்லாமல், தவெக அரசின் பொருளாதார கொள்கை குறித்த விவாதமாக மாறலாம்.
இதேபோல் மதுராந்தகத்திலும் உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து கம்யூனிஸ்ட்கள் பிரச்சாரம் செய்யும்போது, அது ஆளும் கட்சிக்கு அரசியல் ரீதியாக சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
அத்துடன், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் ஏன் பதவி விலகினார்கள்? மக்களுக்கு மீண்டும் ஏன் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது? என்ற கேள்விகளையும் கம்யூனிஸ்ட்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல உள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் பிரச்சாரத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்கப்படுகிறது.
தவெகவின் பிரதான வாக்குகள்
இங்கு இன்னொரு கேள்வியும் எழுகிறது... கம்யூனிஸ்ட்கள் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே களம் இறங்குகிறார்களா? அல்லது தமிழக அரசியலில் தங்களுடைய தனி அரசியல் இடத்தை மீண்டும் உறுதி செய்வதற்கான முயற்சியாகவும் இதை பார்க்க வேண்டுமா?
திமுக, அதிமுக சொல்லும் குற்றச்சாட்டுகளை வழக்கமான அரசியல் விமர்சனமாக பார்க்கும் மக்கள் கூட, ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எழுப்பும் கேள்விகளை வேறு விதமாக பார்க்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இதனால், கம்யூனிஸ்ட்களின் பிரச்சாரம் தவெகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
அதனால் இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்களின் இந்த வித்தியாசமான அரசியல் நிலைப்பாடும் கவனிக்கப்படுகிறது. ஆட்சிக்கு ஆதரவு அளித்துக்கொண்டே தேர்தலில் தனியாகப் போட்டியிடுவது, அதே நேரத்தில் ஆட்சியின் கொள்கைகள் குறித்து விமர்சனங்களை முன்வைப்பது என இந்த அரசியல் நகர்வு மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமானதாகிறது.
மிகப்பெரிய டெஸ்ட் - முன்னோட்டம்
எனவே, இந்த இடைத்தேர்தல் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு வாக்கு சோதனை மட்டுமல்ல, தமிழக அரசியலில் தங்களுடைய தனி இடத்தை எவ்வளவு வலுவாக தக்கவைத்திருக்கிறார்கள் என்பதற்கான சோதனையும் கூட.
மொத்தத்தில், தவெகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்காலத்தில் எப்படி அரசியல் பயணத்தை தொடரப்போகின்றன என்பதற்கும் இந்தத் தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக அமையலாம்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!


Click it and Unblock the Notifications
