தமிழக பட்ஜெட்டில் இடம்பெறப்போகும் திட்டங்கள் என்ன? பிப்.25ல் கூடுகிறது அமைச்சரவை.. முக்கிய முடிவு!
சென்னை: தமிழ்நாடு கேபினட் கூட்டம் வரும் 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25 ஆம் தேதி பகல் 12 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் மார்ச் 14 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் 2025 - 2026 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை மார்ச் 15ம் தேதி் வேளாண் துறை அமைச்சர் எம் .ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 25ம் தேதி, மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம், கடந்த ஜனவரி 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 ஆம் தேதி பதில் அளித்தார். மொத்தம் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக மீண்டும் கேபினட் மீட்டிங் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications