முதல்வர் ஸ்டாலின் தலைமையில்.. தொடங்கியது தமிழக அமைச்சரவைக் கூட்டம்..ஆலோசிக்கப்படும் விஷயங்கள் என்ன?
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தி்ல் சில முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி திமுக ஆட்சி அமைந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சி வருகிற 7-ந் தேதி 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டை தொடங்குகிறது. இத்தகைய சூழலில், இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது. அடுத்த வாரம் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், முதல்வரின் வெளிநாடு பயணத்திற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பாக அறிவிப்பு எதுவும் இல்லை.
அதுபோக தமிழக சட்ட சபை கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக தொழில் துறையின்கீழ், 2024 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்யவும் விரிவாக்கம் செய்வது தொடர்பாக நிறுவனங்களுக்க்கு சலுகைகள் அளிப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றுள்ளது.
ஒரு மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோனஸ், கேட்டர் பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் திடங்க அமைச்சரவை கூட்டத்தில் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு அதிகாரிகள் வெளியேறிய பிறகு அமைச்சர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.
அப்போது, குடியரசுத்தலைவர் வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்படுகள் மேற்கொள்வது குறித்தும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications