முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. புதிய முதலீடுகள் குறித்து ஆலோசனை!
சென்னை: தமிழக சட்டசபையில், துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் துறை ரீதியாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொழில்சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 14 ம் தேதி தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஏராளமான புதிய திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று மாலையே நடக்கிறது
தற்போது துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடக்கின்றன.. தினமும் துறை ரீதியாக அறிவிப்புகள், திட்டங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன, மேலும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அமைச்சர்கள் பதில்களை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று காலையில் சட்டசபையில் சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடந்தன. சட்டமன்ற அலுவல்கள் இன்று பிற்பகலில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து மாலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை நிகழ்வின்போது, அமைச்சரவை கூட்டம் நடப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தொழில்கள் ஒப்பந்தம்
சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கிய இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில்கள் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்தும், இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறலாம் என்றும், சில துறைகள் சார்ந்த கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு தொடர்பாகவும் இன்று விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதைவிட முக்கியமாக இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2025க்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பொன்முடி சர்ச்சை பேச்சு
அதேபோல, அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு காரணமாக அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று எதி்ர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதவிர, அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியுள்ள அமைச்சர்கள் நேரு மற்றும் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. எனவே, இவை குறித்தும், விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications