4 தமிழக அமைச்சர்கள் பதவியை பறிக்க விஜய் திட்டம்? ரெடியாகும் லிஸ்ட்! சிலரது இலாகாவையும் மாற்ற திட்டம்
சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து புகார்களில் சிக்கும் 4 அமைச்சர்கள் இந்த லிஸ்ட்டில் இருப்பதாகவும், அதில் ஒருவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் என்றும் தகவல்கள் வெளியாகியிருப்பதால், தவெக அமைச்சர்கள் இடையே பரபரப்பு நிலவுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியை பிடித்தது. முதல்வராக விஜய் பதவியேற்றார். அவரது கேபினட்டில் விஜய்யுடன் சேர்த்து 35 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இதில் செங்கோட்டையனை தவிர அனைவருமே முதல் முறை அமைச்சர்கள் ஆவர். இதனால், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை மூலமாக தகவல்களை முதல்வர் விஜய் பெற்று வருவதாகவும் சரியாக செயல்படாவிட்டால் அவர்கள் பதவியை பறிக்கவும் விஜய் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

4 அமைச்சர்கள் யார் யார்?
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரைவை கூட்டத்தில் கூட, அமைச்சர்கள் தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும். தெரிந்தவர், தெரியாதவர் என்றெல்லாம் பார்க்க மாட்டேன் என்று எச்சரித்து இருந்தார். இந்த சூழலில், அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் கேபினட்டில் சில அதிரடி மாற்றங்களை செய்ய விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியகியுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்து செப்டம்பருக்கு பிறகு கேபினட்டில் மாற்றம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் (காங்கிரஸ் எம்.எல்.ஏ), போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் ஆகியோரின் பதவி பறிக்கப்படலாம் என்று கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
கீர்த்தனா, ராஜேஷ்குமார், கமலி..
விஜய் தமிழன் பார்த்திபன், விஸ்வநாதன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்ததாலும் அவர்கள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதாலும் விஜய், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதேபோல சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் அடிபட தொடங்கியுள்ளது.
இந்த பட்டியலில், அமைச்சர்க்ள் கீர்த்தனா (தொழில் துறை) கமலி (கால்நடைத் துறை) ஆகியோரும், காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் (சுற்றுலாத்துறை) ஆகியோரின் பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிர்வாக செயல்படுகள், துறை சார்ந்த செயல்பாடுகளை வைத்து தவெக அமைச்சர்களின் இலாகாவை மாற்ற திட்டமிட்டு இருப்பதாகவும், ராஜேஷ்குமாருக்கு சுற்றுலாத்துறையைவிட முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்கப்படலாம் என்றும்சொல்லப்படுகிறது.
வன்னி அரசு, விஜயபாஸ்கர்
அதேபோல சமூக நீதித்துறை அமைச்சராக உள்ள வன்னி அரசுக்கு முக்கியமான துறை ஒதுக்கப்படலாம் என்றும் எனினும், விஜய் வசமே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பட்ஜெட்டுக்கு பிறகு கேபினட் மாற்றம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படும் அதே நேரத்தில், இடைத்தேர்தலுக்கு பிறகும் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து வந்த விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், மற்றும் மரகதம் குமாரவேல் ஆகியோரும் கேபினட்டில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ பதவியை 6 பேர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளது. காலியாக உள்ள அந்த தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த்தப்பட வேண்டும். எனினும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
