சீனியர்கள் காலி.. ஜுனியர்கள் ஜாலி! செந்தில் பாலாஜிக்காக வெயிட்டிங்.. அக்டோபரில் அமைச்சரவை மாற்றம்!
சென்னை : அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளிவந்திருக்கும் நிலையில், அக்டோபரில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்கின்றனர் திமுக சீனியர்கள். துணை முதல்வர் அறிவிப்போடு, சில ஜூனியர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதோடு, சில சீனியர்களின் துறைகள் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 450 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு, குற்றச்சாட்டு பதிவு போன்ற விவகாரங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பறிமாற்ற அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று முன் தினம் மாலை புழல் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் செந்தில் பாலாஜி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரை அமைச்சர்கள், ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். நேற்று மாலை டெல்லியிருந்து முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பிய நிலையில், அவரை செந்தில் பாலாஜி சந்தித்து பேசினார்.
நீதிமன்ற தீர்ப்பு காரணமாக செந்தில் பாலாஜி அமைச்சராக சிக்கல் இல்லை எனக் கூறப்படும் நிலையில் அக்டோபரில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்கின்றனர் திமுக சீனியர்கள். துணை முதல்வர் அறிவிப்போடு, சில ஜூனியர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதோடு, சில சீனியர்களின் துறைகள் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி, அமைச்சரவை மாற்றம் என கடந்த சில நாட்களாக ஊடகங்களில் யூகங்கள் வெளியான நிலையில் கடந்த 24 ஆம் தேதி முதலமைச்சர் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அமைச்சரவையில் மாற்றம் உறுதி தான் என்கின்றனர் திமுகவினர். இதற்கிடையே தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியும் சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் நிலையில் அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் அவருக்கு ஒதுக்கப்படுகிறது.
இதுவரை இந்த துறைகளை கவனித்து வந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் அவர்களது துறையை கவனிக்க இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்த நிலையில் அக்டோபர் மாதத்தில் அவர் மீண்டும் அமைச்சராக இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே சொன்னது போல அவர் வகித்து வந்த துறைகளே ஒதுக்கப்படுகிறது.
இதே போல அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட இருக்கிறார். குறிப்பாக இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு, புதிதாக இரண்டு ஜூனியர்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாசர் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்டோர் அமைச்சரவை பட்டியலில் இணைய இருக்கின்றனர். தங்கம் தென்னரசு, நிதி துறையோடு கூடுதலாக ஒரு துறையை பெற இருக்கிறார். அதே நேரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தி துறை அமைச்சர் சாமிநாதனின் இலாகாக்கள் மாற்றப்படும் என கூறப்படுகிறது. இதனால் யார் பதவி போகுமோ? யாருக்கு எந்த துறை கிடைக்குமோ? என அமைச்சர்கள் பதட்டத்தில் இருக்கின்றனர். ஜூனியர்களோ நமக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? என ஆர்வத்துடன் காத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications