’திராவிட நல் திருநாடு” உங்க நாக்கு தீட்டாகிடுமா? நெஞ்சு எரியும்னா திரும்ப பாடுவோம்! ஸ்டாலின் அதிரடி!
சென்னை: இந்தி மாத விழா நடத்த கூடாது என்று சொன்னால், அந்த விழாவில் திராவிடத்தை விட்டு விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவாங்க.. ஏன், திராவிட நல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா? என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆங்கிலத்தில் எழுதிய The Dravidian Movement and the Black Movement" என்ற நூலின் தமிழாக்கமான "திராவிட இயக்கமும் சுருப்பர் இயக்கமும்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புத்தகத்தினை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, ஓர் அறிவியக்கம் என்பதன் அடையாளம் தான் இந்த நிகழ்ச்சி! கழகத்தைச் சேர்ந்தவர்கள், சிந்தனைத் தெளிவு கொண்ட, அறிவாளிகள் என்பதன் அடையாளம் மாண்புமிகு பொன்முடி அவர்கள்! அப்படிப்பட்டவர், இந்த 'திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வு நூலை நமக்குத் தந்திருக்கிறார்.
கழகப் பொதுக்கூட்டங்களை மாலை நேரக் கல்லூரிகள் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அப்படிப்பட்ட மாலை நேரக் கல்லூரியாக - திராவிட வகுப்பாக இந்தக் கூட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது! இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கும் பொன்முடி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுகள்!
பேராசிரியர் தெய்வசிகாமணியை பொன்முடியாக ஆக்கியவர் தலைவர் கலைஞர்! கலைஞரால் பட்டை தீட்டப்பட்டவர் பொன்முடி; அதனால்தான் தன்னுடைய செயல்பாடுகளால் மின்னுகிறார்! நம்முடைய பொன்முடி அவர்களைப் பற்றி தலைவர் கலைஞரின் 'பஞ்ச் லைன்'-ல் சொல்லவேண்டும் என்றால் "ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பொன்முடி" - "அறிவுமுடிதான் பொன்முடி"! இதைவிட வேறு சிறந்த பாராட்டு அவருக்கு தேவையா?
திராவிட இயக்கத் தீரர்களைத் தந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 'Product' அவர்! மூன்று எம்.ஏ. பட்டம் முடித்து, பி.எச்.டி. செய்து, முனைவர் ஆனவர். கல்லூரி பேராசிரியராக மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது போன்றே, சமூகத்தை பண்படுத்த தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் பகுத்தறிவாளர் கழகம் மூலமாக வகுப்பெடுப்பார். அன்றைய காலகட்டத்தில், திருச்சி செல்வேந்திரன் - பொன்முடி - சபாபதி மோகன், இந்த மூவரணி முழங்காத மேடையும் இல்லை; இவர்களின் குரல் ஒலிக்காத ஊரும் இல்லை! இப்படி ஒரு கொள்கை வீரர் - அல்லும் பகலும் உழைத்தால், அவருக்கு தலைவர் கலைஞரின் அங்கீகாரம் கிடைக்காமல் போகுமா?
1989-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தலைவர் கலைஞர் அவர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இதுவரைக்கும் எட்டு தேர்தலில் போட்டியிட்டு, ஆறு முறை வெற்றி பெற்று, நான்காவது முறையாக அமைச்சராக மக்கள் பணி ஆற்றி வருகிறார். தம்பி உதயநிதி சொன்னாரே, ஆமாம், என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத மாநாடு என்றால், அது, 2003-ல் நடந்த விழுப்புரம் மாநாடு! நான் மாநாட்டிற்கு தலைமைவகித்த முதல் மாநாடு. எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்த நம்முடைய பொன்முடிக்கு இந்த நேரத்தில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பொருத்தவரை, சாதியின் பேரால் - சாத்திர சம்பிரதாயங்களின் பேரால் - காலம் காலமாக உருவாக்கி வைத்திருந்த அத்தனை தடைகளையும் உடைக்கும் சட்டங்களை ஆட்சி அதிகாரத்தின் மூலமாக நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். தடை என்றால், அதை உடை! - அதுதான் நம்முடைய Style! அதனால்தான் நம்மை ஆதிக்க சக்திகளுக்கு பிடிக்கவில்லை! அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்களே என்ற ஆத்திரத்தை, ஆரிய ஆதிக்கவாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! அதை இன்னும் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!

அவர்களுக்கு 'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே அலர்ஜியாக இருக்கிறது! இதை தெரிந்து தான், தந்தை பெரியார் சொல்லி கொடுத்தார். 'திராவிடம்' என்ற சொல்லுக்கு பயப்படுவது போன்று, ஆரியம் வேறு எந்தச் சொல்லுக்கும் அஞ்சி நடுங்கியதில்லை"-என்று பேசினார். அதை நாங்கள் இன்றைக்கு வரை, கண்கூடாக பார்க்கின்றோமே!

ஒருவர் இருக்கிறார், யார் என்று உங்களுக்கே தெரியும்! சட்டமன்றத்தில் திராவிட மாடல்-என்று எழுதி கொடுத்தால் பேச மாட்டார்! இந்தி மாத விழா நடத்த கூடாது-என்று சொன்னால், அந்த விழாவில் திராவிடத்தை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவாங்க! ஏன், "திராவிட நல் திருநாடு"-என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா? இப்படி பாடினால் சிலருக்கு, வாயும் வயிறும் மூளையும் - நெஞ்சும் எரியும் என்றால் திரும்பத் திரும்ப பாடுவோம்!
'திராவிடம்' என்பது ஒருகாலத்தில் இடப்பெயராக - இனப்பெயராக - மொழிப்பெயராக இருந்தது. ஆனால், இன்றைக்கு, அது, அரசியல் பெயராக - ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சிப் பெயராக உருவெடுத்திருக்கிறது! 'திராவிடம்' என்பது ஆரியத்திற்கு 'எதிர்ப்பதம்' மட்டுமல்ல; ஆரியத்தை பதம் பார்க்கும் சொல்! அவர்களுக்கு தலைவர் கலைஞரின் முழக்கத்தை நான் நினைவுபடுத்துகிறேன், "கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக - இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் - சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்!" இந்த முழக்கத்தை நிலைநாட்ட தான், திராவிட மாடல் இருக்கிறது!
திராவிட மாடல் ஆட்சி என்பது, மனு நீதியை மாற்றி, மக்களுக்கு சமநீதி - சமூகநீதி - சமவாய்ப்பை உறுதி செய்யும். இதைத்தான், இந்த புத்தகத்தின் 182-ஆவது பக்கத்தில் நம்முடைய பொன்முடி குறிப்பிடுகிறார். "திராவிட இயக்கம் சாதியற்ற, சமத்துவ சமுதாயத்தைக் கனவு கண்டது. அதனால் திராவிட இயக்கத்தின் பெரும்பாலான இலக்குகள், அரசியல் அல்லது பொருளாதார நோக்கை விடவும் சமூகநோக்கில் இருந்தன"-என்று மிகச்சரியாக சொல்லியிருக்கிறார். அதனால்தான் நம்முடைய முழக்கம் என்பது, 'எல்லார்க்கும் எல்லாம்'-என்று எளிமையாக சொல்கிறோம். அனைத்துத் துறை வளர்ச்சி - அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதோடு, அனைத்து சமூகங்களின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்கிறேன். இதை எளிமையாகவோ - சீக்கிரமாகவோ - நிறைவேற்றிட முடியாது.
ஈராயிரம் ஆண்டு அடிமைத்தனத்தை - ஒடுக்குமுறையை - பழமைவாத மனோபாவத்தை - 100 ஆண்டுகளில் மாற்றிவிட முடியாது! ஆனால், சுயமரியாதைச் சமதர்ம உலகத்தை அமைப்பதற்கான நம்முடைய பயணத்தில், நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு இன்றைக்கு முன்னோக்கிச் செல்ல திராவிட இயக்கம்தான் காரணம் என்பதை மட்டும், என்னால் உறுதியாக சொல்ல முடியும்!
எனவே, இன்றைய தலைமுறையினருக்கு நான் சொல்ல விரும்புவது, நாம் கடந்து வந்த வரலாற்றை, அறிந்து கொள்ளுங்கள்! முனைவர் பொன்முடி அவர்களைப் போல், நம்முடைய இளைஞர்களும் திராவிட இயக்கம், இந்த மண்ணில் நிகழ்த்தி காட்டிய புரட்சி - அதனால் விளைந்திருக்கும் நன்மைகள் திராவிட இயக்கத்தின் தாக்கம் அதனால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறவேண்டும்! அவற்றை புத்தகங்களாக வெளியிடவேண்டும்! அப்படி செய்தால்தான், நம்முடைய இயக்கம் என்ன சாதித்திருக்கிறது என்பது, உலகம் முழுவதும் சென்றடைய முடியும்! அந்தக் கடமை உங்கள் கைகளில் இருக்கிறது.
கொள்கைகள் தான் நம்முடைய வேர்! கொள்கைகளை வென்றெடுக்கத்தான், கட்சியும் ஆட்சியும்! கொள்கைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது! அதற்கு, "திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்" போன்ற இன்னும் பல வரலாற்று நூல்கள் உருவாகவேண்டும். ஏன் என்றால், இப்படிப்பட்ட புத்தகங்கள்தான் கட்சியையும் ஆட்சியையும் காக்கும் கேடயங்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications