மொத்தமாக மாறிய ஸ்டாலின்.. கோட்சூட் அணிந்து அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர்.. வேஷ்டி சட்டைக்கு லீவு
சென்னை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்ற ஸ்டாலின் கோட்சூட் அணிந்து கவனம் ஈர்த்தார்.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

இதற்காக சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். அதன்மூலம் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் ஸ்டாலின் முதல்வரான பிறகு துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உட்பட பல்வேறு நாடுகளுக்கு 2 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த வேளையில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், முக்கிய அதிகாரிகளை அவர் சந்தித்து தொழில் முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வந்தார். இதன் மூலம் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக ரூ.9.94 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக இன்று 3வது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணத்தை தொடங்கி உள்ளார். இந்த முறை அமெரிக்காவுக்கு அவர் புறப்பட்டுள்ளார். அமெரிக்காவில் 17 நாட்கள் அவர் தங்கி தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். அமெரிக்கா செல்வதற்காக முதல்வர் ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டு வந்தார்.
அப்போது அவர் கோட்சூட் அணிந்து கம்பீரமாக காட்சியளித்தார். பொதுவாக முதல்வர் ஸ்டாலின் வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி தான் அணிந்து இருப்பார். வெளிநாடு சுற்றுப்பயணங்கள் செய்யும்போது கோட்சூட் அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் இன்றும் கோட்சூட் அணிந்து கவனம் ஈர்த்தார்.
இன்று அமெரிக்கா புறப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை சான்பிரான்சிஸ்கோ செல்கிறார். அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேறறு தமிழகத்தில் தொழில் தொடங்க வரும்படி அழைக்க உள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. அதன்பிறகு 31ம் தேதி, புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார். செப்டம்பர் 2ம் தேதி சிகாகோ செல்லும் முதல்வர் ஸ்டாலின் 12ம் தேதி வரை அங்கு இருப்பார்.
இந்த வேளையில் "ஃபார்ச்சூன் 500" பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசுவதோடு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார். செப்டம்பர் 7ம் தேதி அயலக தமிழர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமெரிக்காவில் 17 நாட்கள் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 12ம் தேதி சென்னை திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications