விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி
சென்னை: தமிழகத்தின் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில் தூய்மை மற்றும் பசுமைத் திட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் தனியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை தற்போதைய த.வெ.க. ஆட்சியில் முதலமைச்சர் விஜய் தனது நேரடிப் பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த முடிவு நகர்ப்புற மேம்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக பார்க்கப்படுகிறது.

நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தின் நகர்ப்புறப் பகுதிகளை உலகத் தரத்துக்கு கொண்டு செல்வதே முதலமைச்சரின் முதன்மை நோக்கம். அதனால்தான் இந்தத் துறையை அவர் நேரடியாக மேற்பார்வையிட முடிவு செய்தார்" என்று தெரிவித்தனர்.
6 மாத கெடு - அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை
சமீபத்தில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகத் துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் தூய்மைப் பணிகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உயர்ந்த தரத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையர்கள் முதல் வார்டு அதிகாரிகள் வரை அனைவரும் தினசரி காலை கள ஆய்வு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள், பொது இடங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றில் குப்பை, கட்டிடக் கழிவு, சுவரொட்டிகள் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பசுமைப் பரப்பை அதிகரிக்க உத்தரவு
தூய்மைக்கு இணையாக பசுமைத் திட்டமும் முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாலைகளின் இருபுறங்களிலும், சென்ட்ரல் மீடியன்களிலும் பெருமளவில் மரக்கன்றுகள் நடவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களை பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது இதன் நோக்கமாகும்.
மேலும், குப்பை மேலாண்மையில் புதிய அணுகுமுறையை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். வீடுகளிலேயே மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து சேகரிக்கும் முறையை கட்டாயமாக்க வேண்டும். சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டுவதை தவிர்த்து, மறுசுழற்சி செய்வதற்கும், அறிவியல் முறையில் அழிப்பதற்கும் முறையான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை
பொதுமக்களின் அன்றாட வாழ்வோடு நெருக்கமாக தொடர்புடைய இந்தத் திட்டங்களில் எந்தவித அலட்சியமும் அனுமதிக்கப்படாது என்று முதலமைச்சர் விஜய் தெளிவாக எச்சரித்துள்ளார். பணிகளில் தோல்வி அடையும் அதிகாரிகள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தானே பல்வேறு நகர்ப்புறப் பகுதிகளுக்கு திடீர் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அனைத்து நகராட்சி நிர்வாகங்களும் தூய்மை மற்றும் பசுமைப் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கையானது தமிழகத்தின் நகர்ப்புறங்களின் தோற்றத்தையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமின்றி, சிறிய நகராட்சிகளும் இந்த இலக்கை எட்டும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் விஜய்யின் இந்த முயற்சி, தமிழகத்தை தூய்மை மற்றும் பசுமையில் முன்னோடி மாநிலமாக மாற்றும் என்று அரசியல் விமர்சகர்களும், பொதுமக்களும் வரவேற்றுள்ளனர். அடுத்த ஆறு மாதங்கள் தமிழக நகரங்களின் முகவரியை மாற்றும் முக்கிய காலகட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications