ஆபரேஷன் 2.0.. இனிமேலும் விட கூடாது.. கடுமையாக அப்செட் ஆன "தலை".. கச்சேரிக்கு ரெடியாகும் திமுக!
சென்னை: ஆளும் கட்சிக்கு எதிரான விமர்சனங்களை எதிர்கொள்ளும் விதமாக ஆளும் திமுக தரப்பு புதிய யுக்திகள் சிலவற்றை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மே மாதத்தில் முதல் இரண்டு வாரம் பல்வேறு விவகாரங்களில் திமுக தலைமையிலான அரசு கடுமையான பின்னடைவை சந்தித்தது. ஆளும் கட்சியாக இருந்தாலும் சில முடிவுகளில் பின்வாங்க வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு ஏற்பட்டது.
அதிலும் பாரம்பரிய திமுகவினர் சிலரும் கூட விமர்சனம் செய்யும் அளவிற்கு சில விஷயங்கள் நடந்தன. இந்த நிலையில்தான் வரும் நாட்களில் விமர்சனங்களை எதிர்கொள்ள திமுக முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக ஆளும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதீனம்
இந்த மாத தொடக்கத்தில்தான் தருமபுரம் ஆதீனம் பல்லக்கு விவகாரத்தில் ஆளும் திமுக தரப்பு பின்வாங்கியது. மயிலாடுதுறை கோட்டாச்சியர் இந்த பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்க அதற்கு ஆதீனங்கள், பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்நாடு அரசு அந்த தடையை நீக்கியது. அதேபோல் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் பெரிய சர்ச்சையானது.

பீப் பிரியாணி
திமுக ஆட்சியில் பீப் பிரியாணி விற்க தடையா என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த சர்ச்சை காரணமாக தற்போது மழை என்று கூறி இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரங்கள் காரணமாக ஆளும் திமுகவினர் சிலரும் கூட திமுகவை விமர்சனம் செய்து இணையத்தில் போஸ்ட் செய்து வந்தனர். நாம் இருப்பது தமிழ்நாடா இல்லை உத்தர பிரதேசமா என்று விமர்சனம் செய்து வந்தனர்.

திமுக விமர்சனம்
திமுக தலைமையை சில திமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதோடு இணையத்திலும் பாஜகவினர் கையே ஓங்கி இருந்தது. இந்த தொடர் சம்பவங்கள் திமுக தலைமையை கடும் அப்செட்டிற்கு உள்ளாக்கி இருக்கிறதாம். ஆளும் கட்சியாக நாம் செய்யும் நல்ல விஷயங்கள் வெளியேற தெரியாமல் போய்விடுகிறது. இணையத்தில் நமக்கு எதிரான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.

அப்செட்
இதை தடுக்க வேண்டும். நம்முடைய இணைய அணி தீவிரமாக களமிறங்க வேண்டும். ஏதாவது செய்ய வேண்டும். கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. நாம்தான் கேள்விகளை முன்னெடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறதாம். இதற்கு ஏற்றபடி திமுக ஐடி விங்கில் முக்கிய மாற்றங்களை செய்ய பிளான் செய்யப்பட்டு உள்ளதாம். அதன்படி திமுக ஐடி மாநில செயலாளர் டிஆர்பி ராஜா எம்எல்ஏ தலைமையில் பல அதிரடி மாற்றங்களை கட்சிக்குள் செய்ய இருக்கிறதாம் திமுக.

ஐடி விங் திட்டம்
அதன்படி, முதலில் திமுக ஐடி விங் நிர்வாகிகளை பணிக்கு அமர்த்த உள்ளனர். பல மீம் கிரியேட்டர்கள், வீடியோ கிரியேட்டர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்,முன்னாள் செய்தியாளர்கள், அரசியல் ஆலோசகர்கள், சட்ட நிபுணர்கள் என்று பலர் அடங்கிய குழுவை களமிறக்க உள்ளனராம். இந்த குழு மூலம் பாஜக, அதிமுக வைக்கும் விமர்சனங்களுக்கு எதிராக உடனுக்குடன் பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறதாம்.

அமைச்சர்கள் வீடியோ
இது மட்டுமின்றி சமீபத்தில் அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசும் ஒரு வீடியோ வைரல் ஆனதே.. அதேபோல் நிறைய வீடியோக்களை தயாரித்து வெளியிடவும் ஐடி விங் முடிவு செய்துள்ளதாம். மேலும் அரசுக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் தருவது மட்டுமின்றி, பாஜக, அதிமுகவை கேள்வி எழுப்பும் வகையில் டிரெண்டுகளை உருவாக்க திமுக முடிவு செய்துள்ளதாம். சில தலைவர்களை கொஞ்சம் இறங்கி கலாய்க்க ஐடி விங் முடிவு செய்துள்ளதாம்.

ஐடி விங் 2.0
இறங்கி கலாய்ப்பது என்றால்.. நாகரீகம் கருதாமல்.. கிண்டல் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்களாம். திமுகவின் இந்த புதிய ஐடி விங் நியமனம் ஜூன் இறுதிக்குள் நடக்கும் என்று கூறுகிறார்கள். இதை ஐடி விங் 2.0 என்று திமுகவினர் அழைக்கிறார்களாம். அதன்பின் அவர்கள் தீவிரமாக பணிகளில் இறங்குவார்கள். அதற்கு முன்பாக திமுக சார்பாக அமைச்சர்கள் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற உத்தரவும் சென்றுள்ளதாம். அமைச்சர்கள் அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து பேச வேண்டும்.

அண்ணாமலை
அண்ணாமலை போன்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வருகிறது. நாம் பேசுவதே இல்லை. நாம்தான் இனி அதிகம் பேச வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டு இருக்கிறதாம். இதை மீண்டும் அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் திட்டத்தில் இறங்கி உள்ளனராம். நேற்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கொடுத்த ஜிஎஸ்டி பேட்டிக்கும் இதுவே காரணம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications