புடவை ஸ்டைலால் ஃபேமஸ் ஆன பீலா வெங்கடேசுக்கு.. இறுதி ஊர்வலத்திலும் நேர்த்தியை பேணிய குடும்பம்
சென்னை: தமிழக எரிசக்தித் துறை செயலாளராக இருந்த பீலா வெங்கடேசன் உயிருடன் இருந்த போது எப்படி அவர் சேலை கட்டும் ஸ்டைலால் ஃபேமஸ் ஆனாரோ அந்த நேர்த்தியை இறப்பிலும் அவரது குடும்பத்தினர் கடைபிடித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வாழையடி எனும் ஊரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஓய்வு பெற்ற டிஜிபி. இவரது மனைவி ராணி வெங்கடேசன். இவரது மகள் பீலா வெங்கடேசன். இவர் கடந்த 1969 ஆம் ஆண்டு பிறந்தவர்.

எம்பிபிஎஸ் படித்துள்ள பீலா, கடந்த 1997ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்விலும் வென்றார். 1998ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை பீகாரிலும், ஜார்க்கண்டிலும் பணியாற்றியிருந்தார். அதன் பின்னர் தமிழகத்திற்கு மாற்றப்பட்டு 2000- 2001 ஆம் ஆண்டு வரை செங்கல்பட்டு சார் ஆட்சியராகவும், 2001- 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
என்ன பொறுப்பு
இதைத் தொடர்ந்து சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை துணை செயலர் பதவிகளிலும் பணியாற்றியவர். மீண்டும் 2003ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.
மத்திய ஜவுளித் துறை
இதையடுத்து மத்திய ஜவுளித் துறையில் 2014ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார். அதே ஆண்டு தமிழகம் வந்த அவர் சென்னை மீன்வளத்துறை ஆணையராகவும், அதன்பின் நகர ஊரமைப்புத்துறை ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் பொறுப்புகளிலும் இருந்தார்.
கொரோனா
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக பணியாற்றியிருந்தார். இவர் அந்த காலகட்டத்தில் தினமும் மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தினசரி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை தெரிவிப்பார்.
கொரோனாவால் எத்தனை பேர்
அதாவது அன்றைய தினம் கொரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர், எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஸ் செய்யப்பட்டனர். எத்தனை பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு வந்ததால் கொரோனா பாதிப்பு, எத்தனை பேர் இணைநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் போன்ற விவரங்களை தெரிவிப்பார்.
கொரோனா அச்சம்
கொரோனா வைரஸ் குறித்து புரிதல் இல்லாமல் கொரோனா வந்தாலே இறந்துவிடுவோம் என அச்சத்தில் இருந்த பலருக்கு இவரது தெளிவான விளக்கங்கள் ஆறுதலை தந்தன. இவரது காலர் வைத்த ஜாக்கெட்டும், அதற்கு மேட்சிங்காக புடவையும் அனைவர் மத்தியில் பிரபலமடைந்தது.
புடவை கட்டும் நேர்த்தி
அதிலும் அவர் புடவை கட்டும் நேர்த்தியையும் பார்க்க பெண்கள் ஆவலுடன் டிவி முன்பு உட்கார்ந்ததை யாராலும் மறக்க முடியாது. அது போல் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு மிகவும் பொறுமையா பதிலளித்து வந்தார். இந்த நிலையில் 3 மாதங்களாக மூளையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இன்று நல்லடக்கம்
இன்றைய தினம் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கொட்டிவாக்கத்தில் உள்ள பீலாவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பீலாவுக்கு, லைட் பர்பிள் நிறத்தில் அரக்கு பார்டர் போட்டிருந்த சேலையை அணிவித்திருந்தனர். அதில் அவர் பிரஸ்மீட்டில் எப்படி இருந்தாரோ அதே போன்ற நேர்த்தியில் இருந்தார்.












Click it and Unblock the Notifications