ஸ்டாலின், ரஜினி, விஜய், திரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஏன்? நெல்லை என்ஜினியர் வாக்குமூலம்
சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் 1500 வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்ததாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் சரத் சங்கர் சுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு அதிரடி தகவல்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை விமான நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், ராஜ்பவன், அண்ணா பல்கலைக்கழகம், விமான நிலையம், திரைப்பிரபலங்களின் வீடுகள், அரசியல் கட்சியினரின் வீடுகள் என இதுவரை 1500-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் இமெயில் மூலம் சம்பந்தப்பட்டவர்களோ இல்லை காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ வந்திருந்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் போலீஸாரும் வெடிகுண்டு நிபுணர்கள் போய் சோதனை செய்த போது அது புரளி என தெரியவந்தது. என்னதான் புரளி என்றாலும் ஒரு வீட்டில் குண்டு வைத்திருக்கிறார்கள் என சொன்னால், யாருக்குத்தான் அச்சம் இருக்காது?
வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகளில் சோதனை செய்த போது மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது, பிரமுகர்களின் வீடுகளில் அவர்களது அன்றாட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அது போல் விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன.
மிரட்டல் விடுப்பவர் தன்னை போலீஸார் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக விபிஎன், போலி இமெயில் முகவரிகளை பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. எனினும் தொழில்நுட்பங்களை கொண்டு அந்த நபரின் செல்போன், அவரது அடையாளத்தை தமிழக தீவிரவாத தடுப்புத் தடுப்புப் பிரிவு (ATS) போலீஸார் கண்டுபிடித்தனர்.
அந்த நபர், அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினியர் என தெரியவந்தது. அவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த 30 வயதான சரத் சங்கர் சுப்பிரமணியன் என தெரியவந்தது.
இந்த தகவல்களை வெளியிடாத போலீஸார், சரத் தமிழகம் வரும் வரை காத்திருந்தனர். இதையடுத்து அவரது புகைப்படங்களை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி லுக் அவுட் நோட்டீஸ் அளித்திருந்தனர்.
இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் சொந்த ஊருக்கு செல்வதற்காக விமானத்தில் சென்னை வந்தார் சரத். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அந்த நபரை மடக்கி பிடித்து தமிழக தீவிரவாத தடுப்பு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்த போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து போலீஸாரிடம் சரத் சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், தமிழகத்தில் லஞ்சம் அதிகமாக இருக்கிறது. என்னை போன்றவர்கள் நன்றாக படிப்பதற்கும் ஒரு வேலையில் சேர்வதற்குமே லஞ்சம் தடையாக இருந்தது.
திறமை இல்லாதவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து தங்களுக்கு தேவையானதை பெற்றுக் கொண்டனர். நான் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில்தான் படித்தேன். ஆனால் எனக்கு தெரிந்த திறமையே இல்லாத ஒரு பெண், பொறியியல் படித்து முடித்ததும் பிரபல பல்கலைக்கழகத்திற்கு பணிக்குச் சேர்ந்துவிட்டார்.
ஆனால் நான் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை பலமுறை எழுதியும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மனம் வெறுத்து இந்தியாவை விட்டு விட்டு அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு கை நிறைய சம்பாதிக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள ஊழலை எதிர்த்து வெடிகுண்டு புரளியை கிளப்பிவிட்டேன். தவறான அரசியல்வாதிகளை தட்டிக் கேட்க பிரபல நடிகர், நடிகைகளும் முன்வரவில்லை என்பதால் அவர்கள் மீது கோபத்தின் வெளிப்பாடே இந்த வெடிகுண்டு மிரட்டல்!
இதனால்தான் அவர்களுக்கு வீடுகளுக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தேன். அது போல் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் அவர்களது கல்வி நிறுவனங்களுக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டினேன். இவ்வாறு தெரிவித்தார். இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறாராம்.
இவர் ரஜினி, தனுஷ், விஜய் (முதல்வராவதற்கு முன்பு), திரிஷா, எஸ்.வி.சேகர், அருண் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும், ஆளுநர் மாளிகை, சென்னை பாஜக தலைமை அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சரத், எஸ்.வி.சேகருக்கு 12 முறையும் அவரது குடும்பத்தினர் பெயரில் 80 மிரட்டல்களையும் விடுத்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications
