TNEA 2025: தமிழக பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்! AI, Data Science படிப்புகளுக்கு கடும் போட்டி
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 7, 2025) தொடங்குகிறது. சிறப்புப் பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) மற்றும் தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை விரும்பும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யலாம்.
2025-2026 ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கு 417 கல்லூரிகளில் 2.52 லட்சம் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் 1.90 லட்சம் இடங்களுக்குத் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவின் (TNEA) மூலம் கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்தக் கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில், சிறப்புப் பிரிவுகளான மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளைத் தேர்வு செய்து, பாடப்பிரிவுகளைப் பதிவு செய்யலாம். அவர்களுக்கு 8 ஆம் தேதி காலை 7 மணிக்குத் தற்காலிக ஒதுக்கீட்டு இடங்கள் அளிக்கப்படும். அதை அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். பிறகு, 8 ஆம் தேதி இரவு 9 மணிக்கு இறுதியாக ஒதுக்கீட்டு ஆணைகள் ஆன்லைனில் வெளியிடப்படும் எனத் தமிழகப் பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. பொறியியல் படிப்பில் சேரும் முன் மாணவர்கள் கல்லூரிகளை நேரில் சென்று ஆய்வு செய்வது நல்லது எனவும் மாணவர் சேர்க்கைக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 128 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 9 பேரும், விளையாட்டுப் பிரிவில் 356 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப் பிரிவினருக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு ஜூலை 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுக் கலந்தாய்வு ஜூலை 14 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரையும், துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் கலந்தாய்வு முடிவடைகிறது.
மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கடந்த ஜூன் 27 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியானது. இந்த ஆண்டு 3.02 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் 2,50,298 பேர் ஆவர். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 40,645 கூடுதலாகும்.
அதேபோல, இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றவர்களின் எண்ணிக்கை 2,41,641 ஆக உள்ளது. இது சென்ற ஆண்டைவிட 41,773 கூடுதலாகும். இந்த ஆண்டு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று, அரசு ஒதுக்கீடான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 47,372 மாணவர்களுக்குத் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 15,149 கூடுதலாகும்.
இந்த முறை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), கணினி அறிவியல் (Computer Science) உள்ளிட்ட படிப்புகளுக்குப் போட்டி அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவிற்கு வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளதால் இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தப் படிப்புகளுடன் சைபர் பாதுகாப்பு (Cyber Security), மின் மற்றும் மின்னணுவியல் (Electrical and Electronics), மின்னணுவியல் மற்றும் தகவல்தொடர்பு (Electronics and Communication), இயந்திரவியல் (Mechanical), மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics) உள்ளிட்ட படிப்புகளுக்கும் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன.












Click it and Unblock the Notifications