ரேஷன் கடையில் உள்ள பல நாள் பிரச்சனைக்கு தீர்வு.. வந்தது சூப்பர் அறிவிப்பு.. அமைச்சர் அதிரடி உத்தரவு
சென்னை: ஒரே ஒரு முறை ரேஷன் கடைக்கு வந்து அனைத்து பொருட்களையும் பெற்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் பொது விநியோக திட்டம் மூலம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு தேவையான அரிசி விலையில்லாமலும், சர்க்கரை பருப்பு, பாமாயில்,கோதுமை, சர்க்கரை போன்றவை குறைந்த விலையிலும் மக்களுக்கு அரசு வழங்கி வருகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடி மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. பொருளாதார அடிப்படையில் AAY, PHH, NPHH, NPHHS, NPHHN என 5 வகை குறியீடுகளுடன் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ துவரம் பருப்பு, ரூ. 30க்கும், ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ. 30க்கும், பாமாயில் ரூ. 25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் கடைகளை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல், 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும் செயல்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் செயல்படுகின்றன.
எனினும் கிராமப்புறங்களை பொறுத்தவரை ரேஷன் கடைகள் தினசரி இயங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நேரமும் இதுபோன்ற நேரங்களில் இயங்குவது இல்லை என்ற புகார்கள் உள்ளது. நகரங்களில் பிற்பகல் 12 மணிக்கு பிறகு ரேஷனில் பொருட்கள் வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதேபோல் ரேஷன் கடைகளில் கிராமமோ, நகரமோ ஒரே ஒரு முறை ரேஷன் கடைக்கு வந்து அனைத்து பொருட்களையும் பெற்று செல்லும் நிலை இல்லை.. அரிசி, சர்க்கரை மட்டும் தான் எளிதாக கிடைக்கிறது. பாமாயில், துவரம்பருப்பு ஒரே நேரத்தில் வழங்கபடுவது இல்லை என்று சொல்கிறார்கள். பாமாயில் அல்லது துவரம்பருப்பு ஏதாவது ஒரு நாளில் தான் தருகிறார்கள் என்றும் கேட்டால் ஸ்டாக் வரவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த விவகாரம் கடந்த ஒரு மாதமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது பற்றி அதிகாரிளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறைத் தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை அன்று நடந்தது. இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். கே.கோபால், முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிர்வாக இயக்குநர் சு.பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறை தலைவர் க.ஜோஷி நிர்மல் குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது மேலாளர் (சந்தை) ரெ. சதிஷ் மற்றும் துறை சார்ந்த பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ஒருமுறை கடைக்கு வருகை தந்து அனைத்து பொருட்களையும் பெற்று செல்லும் வண்ணம் போதுமான அளவில் இன்றியமையாத பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும். வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு வர இயலாத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாக உணவுப் பொருட்கள் பெறும் முறை எவ்வித தொய்வும் இன்றி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications
