20% போனஸ் அறிவித்தது தமிழக அரசு! சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு “ஸ்வீட் நியூஸ்”!
சென்னை: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் ஊழியர்களுக்கு 20% போனஸ், மற்ற ஆலைகளின் ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் அரசு ஊழியர்களுக்கும், பல்வேறு பொதுத் துறை சார்ந்த ஊழியர்களுக்கும் தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 12 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215 யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3134.75 விவசாயிகள் வழங்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுவதால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.
இந்த நிலையில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி - II ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் போனஸ் ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 5,775 தொழிலாளர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications