பொங்கல் போனஸ் அறிவித்த தமிழக அரசு..போக்குவரத்து ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! எவ்வளவு கிடைக்கும்?
சென்னை: கடந்த ஜனவரி 1ஆம் தேதியே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் போனஸை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 1,03,123 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ. 6,14,92,000 சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஒரு இலட்சத்து மூன்றாயிரத்து நூற்று இருபத்து மூன்று போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே பதினான்கு இலட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு,பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி. போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், போக்குவரத்து கழகங்களின் பணியாளர்களில், 2025-ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்: 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் "சாதனை ஊக்கத் தொகை" வழங்கப்படும்.
இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு இலட்சத்து மூன்றாயிரத்து நூற்று இருபத்து மூன்று போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே பதினான்கு இலட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்." என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவினை கொண்டாடி மகிழ 2024-2025ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 9 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைவார்கள். இந்த உத்தரவின்படி, 'சி' மற்றும் 'டி' பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024-2025 ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்
"சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications