முதல்வர் விஜய்யின் தனி செயலர் லட்சுமி பிரியாவுக்கு கூடுதல் பொறுப்பு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் இரண்டாவது தனிச் செயலரான லட்சுமி பிரியா ஐஏஎஸ், 'முதல்வரின் முகவரி' எனும் குறைதீர்ப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். லட்சுமி பிரியா ஐஏஎஸ், முதல்வர் விஜய்யின் 2வது தனிச் செயலராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த லட்சுமி பிரியா?
லட்சுமி பிரியா, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த 2006 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி. திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தை சேர்ந்த இவர், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்றவர். 28 வயதாக இருக்கும் போதே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியானார். அதன்பிறகு, பல்வேறு மாவட்டங்களில் திறமையான நிர்வாகியாக பணியாற்றி மக்களின் பாராட்டை பெற்றார்.
லட்சுமி பிரியா ஐஏஎஸ், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சமயத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு மற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அரசு மருத்துவமனை ஒன்றில் லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டது பாராட்டுகளைப் பெற்றது.
முக்கிய பொறுப்புகள்
மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், திட்ட இயக்குநர், இணைச் செயலாளர், இணை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பதவிகளில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பல அரசு துறைகளையும் வழிநடத்தி உள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்த லட்சுமி பிரியா, தமிழக முதலமைச்சர் விஜய்யின் இரண்டாவது தனிச் செயலாளராக கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார்.
முதல்வர் விஜய்யின் தனி செயலர்
முதலமைச்சரின் இரண்டாவது தனிச் செயலாளராக முதல்வருக்கான ஆலோசனைகளை வழங்குவது, அமைச்சரவை கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் முறையாக நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்வது, அனைத்து அரசுத் துறைகளும் சரியாக இயங்குகின்றனவா என்பதைக் கண்காணித்து உறுதிசெய்வது, பேரிடர் மேலாண்மை, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான இணைப்புப் பாலமாக செயல்படுவது உள்ளிட்ட மாநிலத்தின் நிர்வாகத்தில் மிகவும் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார் லட்சுமி பிரியா.
கூடுதல் பொறுப்பு
இந்நிலையில், முதலமைச்சரின் இரண்டாம் செயலாளராக பணியாற்றும் ஜி. லட்சுமி பிரியாவுக்கு, 'முதல்வரின் முகவரி' துறையின் சிறப்பு அலுவலர் என்ற கூடுதல் பொறுப்பு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அமுதா ஐஏஎஸ் கவனித்து வந்த இந்தப் பொறுப்பை, அடுத்த உத்தரவு வரும் வரை லட்சுமி பிரியா வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
