தமிழக அரசு கேட்ட நகைக்கடன் லிஸ்ட்? விரைவில் பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்!
சென்னை: சமீபத்தில் மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால சிறப்பு தொகை என ரூ.5000 என தமிழ்நாடு அரசு வழங்கியிருந்தது. இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி இருக்கையில் கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன் விவரங்களை தமிழ்நாடு அரசு கேட்டிருக்கிறது. இதன் மூலம் விரைவில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாமானிய மக்களுக்கு அவசர நேரத்தில் உதவுவது தங்க நகைகள்தான். இதற்காகத்தான் பெரும்பாலான மக்கள் நகைகளை வாங்குகின்றனர். ஒரு சின்ன மூக்குத்தியாக இருந்தாலும், அதை பவுனில் போட வேண்டும் என்று நினைப்பதும் இதற்காகத்தான்.

நகைக் கடன் தள்ளுபடி
ஆனால், சமீப நாட்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்திருக்கிறது. எனவே, நகையை அடகு வைக்கவே மக்கள் பயப்படுகின்றனர். அடகு வைத்த நகையை மீட்க முடியாமல் போய்விடுமோ, கையில் இருக்கும் குண்டுமணி தங்கத்தையும் இழக்க நேரிடமோ என அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் மக்களுக்கு இருக்கும் ஒரு நம்பிக்கை, கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானம் வைத்தால் அந்த கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதுதான்.
அறிவிப்பு வெளியாகுமா?
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது, ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தங்க நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
கூட்டுறவு கடன் சங்கங்கள்
தமிழகம் முழுவதும் சுமார் 4500க்கும் மேற்பட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் மக்கள் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றிருக்கின்றனர். கடந்த முறையும் 5 பவுன் அளவில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன. இதற்காக ரூ.4,904 கோடி ஒதுக்கப்பட்டது. இதனால் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்தனர். இப்படி இருக்கையில் இந்த முறையும் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இப்படி இருக்கையில், கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன் விவரங்களை தமிழ்நாடு அரசு கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாருக்கு தள்ளுபடி செய்யப்படும்?
பொதுவாக நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்போது சில குறிப்பிட்ட வழிமுறைகள் பின்பற்றப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கே நகைக் கடன் தள்ளுபடிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். எடுத்தோம் கொடுத்தோம் என அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படாது. குறிப்பாக, அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் வருமான வரியை செலுத்துபவர்களுக்கு இந்த கடன் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படாது.
யாருக்கெல்லாம் தள்ளுபடி செய்யப்படாது?
அதேபோல ஒரே குடும்பத்தை சேர்ந்த வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு வங்கிகளில் நகைக் கடன்களை பெற்றிருப்பார்கள். ஆனால், ஒரு குடும்பத்திற்கு ஒரு தள்ளுபடி என்கிற விதிதான் பெரும்பாலும் பின்பற்றப்படும். எனவே, இது குறித்து அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். இப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தகுதியான நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அந்த தகவல்கள் வங்கிகளால் மண்டல இணை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
இதை அதிகாரிகள் மேலும் ஒருமுறை சரிபார்த்து, ஒப்புதல் வழங்குவார்கள். இந்த ஒப்புதல் கிடைத்த பின்னர்தான் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு தள்ளுபடி செய்யப்படும் கடன் குறித்து சான்றிதழ் வங்கி வழங்கும். இதை வைத்ததான் நகையை மீட்க முடியும்.












Click it and Unblock the Notifications