டெல்லியில் பொங்கல் விழா கொண்டாடும் தமிழ்நாடு அரசு! ராஜ்பவனை காட்டிலும் பிரம்மாண்ட ஏற்பாடுகள்!
சென்னை: ராஜ்பவனில் ஆளுநர் ரவி நேற்று பொங்கல் கொண்டாடிய நிலையில், தலைநகர் டெல்லியில் மிக பிரம்மாண்டமான பொங்கல் விழாவை கொண்டாடுகிறது தமிழ்நாடு அரசு.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் பொங்கலையொட்டி கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.
இது தொடர்பான விவரம் வருமாறு;

பொங்கல் விழா
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசின் சார்பாக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ஆகிய தினங்களில் சிறப்பாக நடைபெறவுள்ளது. பொங்கல் விழாவினையொட்டி தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் நாளை காலை 11.00 மணியளவில் கோலப்போட்டியினை பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் தொடங்கி வைக்கிறார்.

பெண்கள் கூட்டாக பொங்கல்
அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் போகி பண்டிகை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. பொங்கல் விழாவையொட்டி 15.01.2023 அன்று காலை 11.00 மணிக்கு வைகை தமிழ்நாடு இல்லத்தில் கூட்டாக பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாட உள்ளார்கள். அதன் பிறகு பொங்கல் விழா தொடக்க நிகழ்ச்சி மாலை 3.30 மணிக்கு வைகை தமிழ்நாடு இல்லத்தில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கப்படவுள்ளது.

நையாண்டி மேளம்
அதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய பரதநாட்டியம், நாட்டுப்புற கலைஞர்களின் நையாண்டி மேளம், தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பொங்கல் விழாவையொட்டி பல்வேறு பிரிவின்கீழ் ஓவிய போட்டி, கபடி போட்டி, எரிபந்து, சக்கர நாற்காலி, கோ-கோ மற்றும் உறியடி போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பொங்கல் விழாவில் மொத்தம் 199 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசு அழைப்பு
பொங்கல் விழாவையொட்டி சுற்றுலாத்துறை, ஆவின், பூம்புகார், கோ-ஆப்டெக்ஸ், டாம்ப்கால், இன்ட்கோசர்வ், மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சியில் விற்பனையும் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் தமிழ்நாட்டை சார்ந்த பல்வேறு உணவகங்களும் பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செயல்படவுள்ளது. எனவே டெல்லி வாழ் தமிழ்நாடு மக்கள் அனைவரும் பொங்கல் விழாவிற்கு வருகை தருமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications