தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றம்.. ‘இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை’ தனித் துறையாக உருவாக்கம்
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், "இந்து சமய மற்றும் அறநிலையத் துறை" என்ற பெயரில் புதிய தனித் துறையை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது என்று தமிழக அரசு.
புதிய துறையின் கட்டுப்பாட்டில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை ஆணையரகம் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் வி.ராஜாராமன் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை செயலர் பதவியை கூடுதலாக கவனிப்பார். மறு உத்தரவு வரும் வரை அவர் இந்தப் பொறுப்பை வகிப்பார் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் சுற்றுலா மற்றும் பண்பாடு துறைகளின் உள்ளே இருந்த சமய அறநிலையங்கள் துறையை தனியாகப் பிரித்து 'இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், தலைமை செயலகத்தில் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பணிகளை வேகப்படுத்தும் நோக்கில் இப்புதிய தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை இயங்கி வந்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையரகம், இனி முழுமையாக இந்த புதிய தனித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.

புதிய துறை உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் நிர்வாக விதிகள் மற்றும் தலைமை செயலக நடைமுறை விதிகளில் மாற்றங்கள் கொண்டுவர மனித வள மேலாண்மைத் துறை தனியாக அரசாணை வெளியிடும்.
மேலும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளராகப் பணியாற்றி வரும் ராஜாராமன் ஐஏஎஸ், மறு உத்தரவு வரும் வரை இந்தஒ புதிய இந்து சமய அறநிலையத் துறையின் செயலாளராக கூடுதல் பொறுப்பைக் கவனிப்பார் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
